வணிகம்

இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் 2% வரை‌ உயர்வு

இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் 2% வரை‌ உயர்வு

jagadeesh

பங்குச் சந்தைகளில் இன்று இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகளின் விலை சுமார் 2 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

முறைகேடு குற்றச்சாட்டின் எதிரொலியாக இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகளின் விலை நேற்று சுமார் 16 சதவிகிதம் சரிந்தன. இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக அந்நிறுவனத்தின் தணிக்கை குழு தனிப்பட்ட முறையில் விசாரணை மேற்கொள்ளும் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் நீலகேனி தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இன்று அந்நிறுவனப் பங்குகள் 2 சதவிகிதம் வரை விலை உயர்ந்து வர்த்தகமாகிறது.

கடந்த இரண்டு காலாண்டுகளில் இன்ஃபோசிஸ் தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக்கும், தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராயும் நிதி மோசடிக்காக சில தகவல்களை மறைத்துள்ளனர் என அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களே குற்றம்சாட்டியுள்ளனர். சில நிறுவனங்களுடன் கூட்டு வர்த்தகம் தொடர்பான தகவல்களை தவறாகவும், திரித்தும், மறைத்தும் பங்குச் சந்தைகள் உள்ளிட்ட சட்டரீதியான அமைப்புகளுக்கு அளித்திருப்பதாகவும் தலைமை அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. தங்களது மோசடிகளை ஆடிட்டர் குழுவுக்கும், இன்ஃபோசிஸ் நிறுவன குழுவுக்கும் கூட தெரியாமல் தலைமை அதிகாரிகள் பார்த்துக்கொண்டதாகவும் அவர்கள் குற்றச்சாட்டை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்தப் புகார் குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.