வணிகம்

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நஷ்டம் ரூ.3,174 கோடி - காரணம் அடுக்கும் இண்டிகோ

நிவேதா ஜெகராஜா

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான 'இண்டிகோ', நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.3,174 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் பல மாநிலங்களில் கோவிட் கட்டுபாடுகள் இருந்தன. அதனால், நஷ்டம் உயர்ந்திருப்பதாக இண்டிகோ தெரிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூன் காலாண்டிலும் ரூ.2844 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து விமான போக்குவரத்து துறை பெரும் சிக்கலில் இருந்து வருகிறது.

இண்டிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரொனோ தத்தா தெரிவிக்கையில், ‘குறுகிய காலத்தில் கோவிட் பெரும் சிக்கலை உருவாக்கி இருக்கிறது. ஆனால், நீண்ட காலத்தில் இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என தெரிவித்திருக்கிறார்.

மேலும், அடுத்தடுத்த மாதங்களில் இயல்புநிலை திரும்பும். இந்த ஆண்டு இறுதிக்குள் கோவிட்டுக்கு முந்தைய நிலையை இண்டிகோ அடையும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

நிறுவனத்தின் நஷ்டம் அதிகரிக்க விமான எரிபொருளும் ஒரு முக்கிய காரணம். கடந்த ஆண்டு ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது விமான எரிபொருள் சராசரியாக 97 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதேபோல மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது 12 சதவீதம் அளவுக்கு விமான எரிபொருளின் விலை அதிகரித்திருக்கிறது.