வணிகம்

கொரோனோ முதல் அலையில் நடுத்தர மக்களுக்கு கைகொடுத்த தங்கக் கடன்... இந்த 2-ம் அலையில்?

கொரோனோ முதல் அலையில் நடுத்தர மக்களுக்கு கைகொடுத்த தங்கக் கடன்... இந்த 2-ம் அலையில்?

நிவேதா ஜெகராஜா

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையில் பெரும்பாலான மக்களுக்கு நிதி திரட்டுவதற்கு பெரும்பாலானவர்களுக்கு கிடைத்த ஆயுதம் தங்கம்தான். இந்த அலை கொரோனாவில் அதற்கு என்ன நிலை ஏற்பட்டுள்ளது என்பதை இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.

கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் அதேவேளையில் சமூகப் பொருளாதாரம் பக்கவிளைவுகளும் தொடர்ந்து அதிகரித்தே வருகின்றன. தொழில் பாதிப்பு, வேலை இழப்பு, அதிகரிக்கும் மருத்துவ செலவுகள் என பாதிப்புகள் பல வகைகளில் உள்ளன. இதுபோன்ற பேரிடர் காலங்களில் பொருளாதார ரீதியில் நடுத்தர மற்றும் அதற்கும் கீழே இருப்பவர்களுக்கு தங்கம் பேருதவி செய்யும் என்றால் அது மிகையில்லை. தங்கத்தில் முதலீடு செய்வதே அவசரத் தேவைக்குதான் என்னும் எண்ணம் மேலோங்கி இருக்கிறது.

தங்கத்தில் முதலீடு செய்யலாமா, நகை வாங்கலாமா, காயின் வாங்கலாமா இடிஎஃப் வாங்கலாமா, மொத்த பணத்தையும் தங்கமாக வாங்கலாமா என தங்கத்தில் தீர்க்கபட வேண்டிய பல கேள்விகள் உள்ளன. ஆனாலும் தங்கம் மீது மக்களுக்கு ஆசை இருக்கிறது. அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதால், அந்த ஆசைக்கு மாற்று இல்லாமல் இருக்கிறது.

கடந்த ஆண்டு முதல் அலையில் பெரும்பாலான மக்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. அப்போது நிதி திரட்டுவதற்கு பெரும்பாலானவர்களுக்கு கிடைத்த ஆயுதம் தங்கம்தான். கடந்த ஆண்டு ஜூன் முதல் ஏப்ரல் 2021-ம் வரை தங்கம் மீதான கடன்கள் 70 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

தங்கத்தை பல இடங்களில் அடமானம் வைக்கலாம். வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், தங்க நகை அடமானத்துக்கு என இருக்கும் பிரத்யேக நிறுவனங்கள் மற்றும் சிறு கடைகள் என பல இடங்களில் வைக்கலாம்.

தங்கத்தின் அப்போதைய விலையில் குறிப்பிட்ட சதவீதத்துக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். பேரிடர் காலமாக இருப்பதால் வங்கிகள் அதிகபட்சமாக 90 சதவீதம் அளவுக்கு கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதாவது, தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை வங்கிகள் கடன் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் பெரிய அளவுக்கு பதற்றமான சூழல் இருந்ததால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரத் தொடங்கியது. அதனால் அந்தச் சூழலுக்கு கூடுதல் தொகை கடனாக வழங்கப்பட்டிருக்கும். ஆனால், கடந்த ஓர் ஆண்டில் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்திருக்கிறது.

இப்போது வங்கிகளுக்கு மட்டுமல்லாமல் கடன் வாங்கியவர்களுக்கும் புதிய சிக்கல் உருவாகி இருக்கிறது. தங்கத்தின் மதிப்பு குறைந்திருப்பதால், அடகு வைத்திருக்கும் நகையை ஏலத்தில் விட வேண்டும், இல்லையெனில் கூடுதல் பணம் அல்லது நகையை கேட்கும் நிலையில் வங்கிகள் உள்ளன. கடந்த சில வாரங்களாக தங்க நகைகள் அடமானம் குறித்த விளம்பரங்கள் அதிகளவு வருவதாக புளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்தச் சூழலில் இரண்டாம் அலை வேகம் எடுத்திருப்பதால், தற்போது புதிதாக அடமானம் வைப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்ல உயரத்தொடங்கும் என தெரிகிறது.

இது தொடர்பாக பிரகலா வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் இயக்குநர் சொக்கலிங்கம் பழனியப்பனிடம் உரையாடினோம். "கடந்த ஆண்டு லாக்டவுன் முடிந்தபிறகு தங்கம் மீதான கடன் அதிகமாக இருந்தது கண்கூடாக தெரிந்தது. இந்த ஆண்டு இனிதான் நிலைமை தெரியவரும். வங்கி நடைமுறையில் பழக்கம் இருப்பவர்கள் நேரடியாக வங்கியில் தங்க நகைக் கடன் வாங்குவார்கள். வங்கி நடைமுறையில் அதிக பழக்கம் இல்லாதவர்களை இருவகையாக பிரிக்கலாம். தோராயாமாக ரூ.10,000-க்கு மேல் தேவை எனில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அல்லது பிரத்யேக நகை அடமான நிறுவனங்களில் கடன் வாங்குவார்கள்.

ரூ.10,000-க்கு கீழ் பணம் தேவைப்பட்டால் அவர்கள் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை விட சிறு அடகு கடைகளைதான் பெரும்பாலும் நாடுவார்கள். இங்கு அவர்களுக்கு வட்டி கூடுதலாக இருந்தாலும், எளிதில் அணுகுதல் மற்றும் உடனடியாக பணம் கிடைப்பது ஆகிய காரணங்களால் அடகு கடைகளை நோக்கி மக்கள் செல்கிறார்கள்" என சொக்கலிங்கம் பழனியப்பன் தெரிவித்தார்.

முகக்கவசம் அணியுங்கள், கிருமிநாசினி பயன்படுத்துங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என தொடர்ந்து சொல்கிறோம். அதே அளவுக்கான முக்கியத்துவத்தை தனிப்பட்ட நிதி சார்ந்த விஷயத்துக்கு கொடுக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. போதுமான காப்பீடு (மருத்துவம் + டேர்ம்) எடுங்கள். அவசர கால நிதியை உருவாக்குங்கள் என்பது உள்ளிட்ட நிதி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திகொள்வது காலத்தின் அவசியம்.