2024-2025ஆம் நிதியாண்டு நாளையுடன் நிறைவைடைய உள்ளது. இந்த ஓராண்டில் இந்திய பங்குச்சந்தைகளின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை தற்போது பார்க்கலாம்.
2024-25 நிதி ஆண்டில் பங்குச் சந்தை இரு பாதைகளில் பயணித்தது. நிதி ஆண்டில் முதல் பாதியில், அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் பங்குச் சந்தை 16 சதவீதம் வரையில் ஏற்றம் கண்டது. ஆனால், இரண்டாம் பாதியில் 8.9 சதவீதம் சரிவை சந்தித்தது. அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் தங்கள் பங்குகளை விற்று வெளியேறியதன் காரணமாக இரண்டாம் பாதியில் சரிவு ஏற்பட்டது.
அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.1.3 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுவெளியேறினர். ஒட்டுமொத்த அளவில் 2024-25 நிதி ஆண்டில் சென்செக்ஸ் 5.1 சதவீதம் வளர்ச்சி கண்டது. முதல் பாதியில் முதலீட்டாளர்கள் வசம் இருந்த பங்குகளின் மதிப்பு ரூ.94 லட்சம் கோடியாக உயர்ந்தது.
இரண்டாவது பாதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக அது ரூ.63.7 லட்சம் கோடியாக குறைந்தது. அதேசமயம், எஸ்ஐபி (SIP) வழியான முதலீடு கணிசமாக அதிகரித்தது. 2023-24 நிதி ஆண்டில் எஸ்ஐபி மூலம் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்ட நிலையில், 2024-25 நிதி ஆண்டில் அது ரூ.2.6 லட்சம் கோடியாக உயர்ந்தது.
நிறுவனப் பங்குகளைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக பார்தி ஏர்டெல் 41 சதவீதம், மஹிந்திரா 39 சதவீதம், ஹெச்டிஎஃப்சி வங்கி 29 சதவீதம் ஏற்றம் கண்டன. இண்டஸ்இண்ட் வங்கி 58 சதவீதம், டாடா மோட்டார்ஸ் 32 சதவீதம், டைட்டன் 19 சதவீதம் சரிவைக் கண்டன. நடப்பு நிதி ஆண்டில் தங்கமும் வெள்ளியும் நல்ல ஏற்றம் கண்டன. இரண்டும் தலா 38 சதவீதம் உயர்ந்தன. அதேபோல் பிட்காயின் மதிப்பும் 20 சதவீதம் உயர்ந்தது.