வணிகம்

புதிய வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளால் அதிகரிக்கும் சிறுதானிய ஏற்றுமதி!

புதிய வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளால் அதிகரிக்கும் சிறுதானிய ஏற்றுமதி!

EllusamyKarthik

ஊட்டச்சத்து நிறைந்த தானியங்களுக்கான தேவை உலகளவில் தொடர்ந்து அதிகரிப்பதாலும், இந்திய ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு சந்தைகளைக்  கண்டறிந்துள்ளதாலும், சிறுதானியங்கள் ஏற்றுமதி வேகமாக அதிகரிக்கும் என வர்த்தகத்துறை எதிர்பார்க்கிறது.

தற்போது, உலகளவில் சிறுதானியங்கள் ஏற்றுமதியில், இந்தியா 5வது பெரிய நாடாக உள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டில் இந்தியா 26.97 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. உலகளவில்  சிறுதானியங்கள் ஏற்றுமதி கடந்த 2019ம் ஆண்டில், 380 மில்லியன் அமெரிக்க டாலராகவும், 2020ம் ஆண்டில் 402.7 மில்லியன் அமெரிக்க டாலராகவும் அதிகரித்துள்ளது.  அமெரிக்கா, ரஷ்யா, உக்ரேன், சீனா, நெதர்லாந்து, பிரான்ஸ், போலந்து மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் சிறுதானியங்களை  அதிகளவில் ஏற்றுமதி செய்கின்றன.

இந்தியாவிலிருந்து நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா போன்ற நாடுகள் சிறுதானியங்களை  அதிகளவில் இறக்குமதி செய்கின்றன. லிபியா, துனிசியா, மொராக்கோ, இங்கிலாந்து, ஏமன், ஓமன் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கும் சிறுதானியங்களை  இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. மேற்கண்ட 10 நாடுகள், கடந்த 2020-21ம் ஆண்டில்  22.03 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இந்தியாவிலிருந்து சிறுதானியங்களை  இறக்குமதி செய்தன.  மற்ற நாடுகள் 5.13 மில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்கின்றன.

இந்திய ஏற்றுமதியாளர்கள் சிறுதானியங்களை  புதிய சந்தைகளில் விற்பனை செய்வதற்கான வசதிகளை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபெடா) அறிவித்துள்ளது. இந்திய  ஏற்றுமதியாளர்கள்  புதிய சந்தைகளில் சிறுதானியங்களை  ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை அபெடா செய்து வருகிறது.

Source: PIB