வணிகம்

2ஆம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.3% வளர்ச்சி

webteam

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2017 ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில் 6.3% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரிக்கு பின்னர் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவை சந்தித்திருந்தது. இதனால் 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவாகும். இதனால் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும் மத்திய அரசை பெரும்பாலும் விமர்சித்து வந்தனர்.

இதையடுத்து ஜி.எஸ்.டி வரியில் மத்திய நிதித்துறை பல்வேறு மாற்றங்களையும், திருத்தங்களையும் கொண்டு வந்தது. பல பொருட்களின் வரி கணிசமாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள, நாட்டின் 2ஆம் காலாண்டின் பொருளாதார வளர்ச்சியின் அளவு 6.3% ஆக உயர்ந்துள்ளது. முதல் காலாண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த வளர்ச்சி 0.6% அதிகமாகும்.