வணிகம்

டெஸ்லா நிறுவனத்திற்கு போட்டியாக புதிய மின்சார காரை அறிமுகப்படுத்திய ஹூண்டாய் நிறுவனம்!

ச. முத்துகிருஷ்ணன்

உலகின் முன்னணி மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவுக்கு போட்டி ஏற்படுத்தும் வகையில் மின்சார காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஐயோநிக் 6 (Ioniq 6) என்ற பெயரில் இந்த கார் தென்கொரியத் தலைநகர் சியோலில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை சுமார் 37 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 610 கி.மீ தூரம் பயணிக்கும் வசதியுடன் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. டெஸ்டா மாடல் 3 ஆனது 602 கி.மீ தூரம் மட்டுமே செல்லும் நிலையில் அதை விட 8 கி.மீ தூரம் அதிகம் செல்லும் வகையில் ஐயோநிக் 6 உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல பூஜ்ஜுயம் வேகத்தில் இருந்து 100 கி.மீ வேகத்திற்கு 5.1 விநாடிகளில் மாறும் அளவுக்கு Electrified Streamliner பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலுள்ள 350 கிலோ வாட் சார்ஜர் உதவியால் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதத்திற்கு சார்ஜ் செய்ய 18 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

2030 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மின்சார கார் மாடல்களை தயாரித்து அறிமுகம் செய்ய இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. உலகின் மின்சார வாகன சந்தையில் 12 சதவிகித இடத்தைப் பிடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹூண்டாய் மின்சார கார்கள் மூலம் உலகின் முன்னணி மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவுக்கு கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.