வணிகம்

அடுத்த மாதம் கார்களின் விலையை உயர்த்துகிறது ஹோண்டா: காரணம் என்ன?

நிவேதா ஜெகராஜா

ஜப்பானை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா அடுத்த மாதம் முதல் இந்தியாவில் உள்ள அனைத்து மாடல் கார்களுக்கும் விலையை உயர்த்துகிறது. ஸ்டீல் உள்ளிட்ட உலோகங்களின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால், இந்த விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை என ஹோண்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அமேஸ், சிட்டி உள்ளிட்ட மாடல் வாகனங்களை ஹோண்டா விற்பனை செய்கிறது. அவற்றின் விலைதான் அதிகரிப்படும் என சொல்லப்பட்டிருக்கும் நிலையிலும், எவ்வளவு தொகை உயர இருக்கிறது என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. அதற்கான திட்டமிடல் நடந்துவருவதாக ஹோண்டா தெரிவித்திருக்கிறது.

ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் ஹோண்டா கார்களின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது இரண்டாம் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உயர்த்தப்பட இருக்கிறது.

ஸ்டீல் மட்டுமல்லாமல், ரோடியம் மற்றும் பலோடியம் உள்ளிட்ட பெரும்பாலான மூலப்பொருட்களின் விலை உயரந்திருக்கிறது. மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டி இருக்கிறது. அதற்கு இந்த உலோகங்களின் தேவை இருக்கிறது. உலோகத்தின் தேவை அதிகரிப்பால், பிறவற்றின் விலையும் உயரந்திருக்கிறது.

ஹோண்டா மட்டுமல்லாமல் மற்றொரு முக்கியமான நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனமும் ஏப்ரல் மற்றும் ஜூனில் வாகனங்களின் விலையை உயர்த்தியது நினைவுகூரத்தக்கது.

அதேபோல இரு சக்கர வாகன நிறுவனமான ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனமும் ஜூலை 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களின் விலையை அதிகபட்சம் ரூ.3000 வரை உயர்த்தி இருக்கிறது. இந்த நிறுவனமும் விலையேற்றத்துக்கு மூலப்பொருட்களின் விலையேற்றத்தை குறிப்பிட்டிருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஏற்கென்வே வாகன விற்பனை மந்தமாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்றாலும், விலையேற்றம் காரணமாக ஆட்டோமொபைல் துறையில் மேலும் ஒரு தேக்க நிலை உருவாக்கக் கூடும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.