வணிகம்

மும்பையில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீட்டுப் பதிவு

மும்பையில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீட்டுப் பதிவு

Veeramani

மும்பையில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீட்டுப் பதிவு (Registrations) நடந்திருக்கிறது. ஜூலை மாதத்தில் 9,037 வீடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் உயர்வாகும். அதேசமயத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 239 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2,662 வீடுகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மே மாதத்துக்கு பிறகு மும்பையில் வீடு முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது ஜூலையில் இது உச்சத்தை அடைந்திருக்கிறது.

கடந்த ஆண்டு மகரராஷ்டிர அரசு பத்திரப் பதிவு வரியை சிறிதளவு குறைத்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் 2021-ம் மார்ச் வரை வரி குறைக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்துக்குள் பத்திரப் பதிவு வரியை (Stamp duty) செலுத்தும்பட்சத்தில், அந்த சொத்தினை பதிவு செய்துகொள்வதற்கு நான்கு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. ஜூலை இறுதியில் இந்த அவகாசம் முடிவுக்கு வருகிறது.

இது தவிர, ஜூலையில் பதிவு செய்யப்பட்ட வீடுகளில் 53 சதவீதம் (4,824 வீடுகள்) அளவுக்கு புதிய வீடுகள் ஆகும். இதனால் ஜூலையில் பத்திரப் பதிவு வரி 512 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் ரூ.420 கோடி மட்டுமே கிடைதத்து.