வணிகம்

பெட்ரோல், டீசல் விலை எதிரொலி: 'மருத்துவம், மளிகை செலவை குறைத்த மக்கள்'

நிவேதா ஜெகராஜா

கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. போக்குவரத்துக்காக அதிகம் செலவு செய்வதால் மருத்துவம், மளிகை மற்றும் இதர வீட்டுத் தேவைகளுக்கான மக்களின் செலவு மிகவும் குறைந்திருப்பதாக எஸ்பிஐ நிறுவனத்தின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 

மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என எஸ்பிஐ குழுமத்தின் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் வலியுறுத்தியுள்ளார்.

எஸ்பிஐ கார்டுகளைக் கொண்டு மக்கள் பயன்படுத்துவதை அடிப்படையாக வைத்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. அதன் முடிவு குறித்து அவர் தெரிவிக்கையில், “கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது மத்திய அரசு கூடுதல் வரியை விதித்தது. ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைந்த சமயத்தில் விரியை குறைக்க மத்திய அரசு முன்வரவில்லை. அதில் எரிபொருளுக்கு வழக்கத்தை விட அதிகமாகவும், அத்தியாவசிய தேவைகளுக்கான செலவு குறைந்திருப்பதாகவும் தெரிகிறது.

எரிபொருள் விலை தொடர்ந்து உயர்வாக இருப்பதால் பணவீக்கமும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. அரசு உடனடியாக தலையீட்டு இந்த பிரச்னையை சரிசெய்ய வேண்டும்” என்று கோஷ் தெரிவித்திருக்கிறார்.

எஸ்.பி.ஐ. தரப்பில், ‘பெட்ரோல் விலை 10 சதவீதம் உயர்ந்தால் பணவீக்கத்தில் 0.50 சதவீதம் அளவுக்கு ஏற்றம் இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் பணவீக்கம் உயரும் அபாயம் இருக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘இன்னும் இரண்டாம் அலை முடிவுக்கு வரவில்லை. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தாக்கம் குறையவில்லை. ஒரு நாளைக்கு 70 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்கும்’ என எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது.