வணிகம்

ஹூண்டாய் நிறுவனத்திற்கு எதிராக சமூக வலைதளத்தில் ஒலித்த முழக்கம்

EllusamyKarthik

தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் இந்தியா, பாகிஸ்தான் உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் ஹூண்டாய் நிறுவனம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இயங்கியதாக சொல்லி சமூக வலைதளத்தில் இந்திய நெட்டிசன்கள் கொதித்தெழுந்து உள்ளனர். 

#BoycottHyundai என ஹூண்டாய் தயாரிப்புகளை புறக்கணிப்போம் என குரல் எழுப்பி வருகின்றனர். அதோடு பலமான எதிர்ப்பையும் எடுத்து வைத்து வருகின்றனர். 

 

இதற்கு காரணம் என்ன?

காஷ்மீர் விவகாரத்தை முன்னெடுக்கும் விதமாக கடந்த 1990 முதல் பாகிஸ்தான் நாட்டில் ஆண்டுதோறும் பிப்ரவரி 5-ஆம் தேதி ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ என கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த நாளில் பாகிஸ்தான் நாட்டில் தேசிய விடுமுறை எனவும் தெரிகிறது. இந்த நிலையில் ‘ஹூண்டாய் பாகிஸ்தான்’ அது தொடர்பான பதிவு ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் “நமது காஷ்மீரி சகோதரர்களின் தியாகங்களை நினைவு கொள்வோம், அவர்கள் சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக நிற்போம்” என தெரிவித்துள்ளது ஹூண்டாய் பாகிஸ்தான். 

அதை கவனித்த இந்திய நெட்டிசன்கள் இந்த விவகாரம் தொடர்பாக ஹூண்டாய் நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும், எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்றும், ஹூண்டாய் நிறுவனத்தை புறக்கணிப்போம் என்றும் ட்வீட் செய்துள்ளனர். சிலர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டில் ஹூண்டாய் விற்பனை செய்துள்ள வாகனங்களின் விவரங்களை ஒப்பிட்டு வருகின்றனர். 

ஹூண்டாய் இந்தியா பதில்!

இந்த நிலையில் ஹூண்டாய் இந்தியா இது தொடர்பாக பதில் அளித்துள்ளது.

“ஹூண்டாய் மோட்டார் இந்தியா 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சந்தையில் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் வலுவான நெறிமுறைகளுக்கு நாங்கள் மதிப்பாளிக்கிறோம். 

இந்திய நாடு ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது தாயகமாகும். இந்த நிலையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவுக்கு தொடர்பில்லாத விவகாரத்தில் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் போஸ்ட்கள் வந்துள்ளன. அந்த பார்வையை நாங்கள் கண்டிக்கிறோம். 

தொடர்ந்து இந்தியாவின் முன்னேற்றத்திற்காக எங்களது பணி தொடரும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.