வணிகம்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எவற்றின் விலை குறையும்? எவை விலை உயரும்?

Veeramani

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்கள், சேவைகளுக்கு வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதனால் எவை விலை குறையும்? எவை அதிகரிக்கும்? பார்க்கலாம்.

புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி 18 லிருந்து 5 சதவிகிதமாகிறது. டீசலில் கலப்பதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் பயோ டீசலுக்கு வரி 12ல் இருந்து 5 சதவிகிதமாக குறைகிறது. 75 சதவிகிதத்துக்கு மேல் அரசு செலவிடும் திறன் வளர்ப்பு பயிற்சி செலவின் மீதான 18 சதவிகித வரி ரத்து செய்யப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கருவிகள், உதிரிபாகங்கங்களுக்கு 5ல் இருந்து ஜிஎஸ்டி 12 சதவிகிதமாகிறது. அட்டைப்பெட்டி, பைகள், பேக்கிங் கன்டெய்னர்களுக்கு வரி 12ல் இருந்து 18 சதவிகிதமாகிறது. அனைத்து வகையான பேனாக்களுக்கு 12ல் இருந்து ஜிஎஸ்டி 18 சதவிகிதமாக உயர்கிறது.

தூய மருதாணி பவுடருக்கு 5 சதவிகிதமும், நறுமண இனிப்பு பாக்குக்கு 18 சதவிகிதமும் வரி விதிக்கப்படுகிறது. பழச்சாறுடன் கூடிய கார்பனேட்டட் குளிர்பானங்களுக்கு 28 சதவிகித ஜிஎஸ்டி மற்றும் 12 சதவிகித செஸ் விதிக்கப்படுகிறது. யூபிஎஸ் மற்றும் இன்வர்டர்களுடன் விற்பனை செய்யப்படும் பேட்டரிகளுக்கு 28 சதவிகிதமும், யூபிஎஸ் மற்றும் இன்வர்டர்களுக்கு 18 சதவிகிதமும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். ஆன் லைனில் உணவு விநியோகிக்கும் ஸ்விகி, சோமோட்டோ நிறுவனங்கள் இனி ஜிஎஸ்டி வரியை ஹோட்டலில் வசூலிக்காமல், உணவு வாங்குபவரிடம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், வாடிக்கையாளருக்கு கூடுதல் செலவு ஏற்படாது.