வணிகம்

ஜிஎஸ்டி வசூல் ஜூலை மாதத்தில் ரூ.1,16,393 கோடியாக உயர்வு

Veeramani

நாட்டின் ஜிஎஸ்டி வசூல் சென்ற ஜூலை மாதத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஜூலை மாதத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 393 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வசூலான 87 ஆயிரத்து 422 கோடி ரூபாயை விட 33 சதவிகிதம் அதிகம் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம், சென்ற ஜூன் மாதத்தில் தொடர்ந்து 8 மாதங்களுக்குப் பிறகு ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியிலிருந்து குறைந்து 92 ஆயிரத்து 849 கோடி ரூபாயாக இருந்தது.

குறிப்பாக, தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 36 சதவிகிதம் அதிகரித்து 6 ஆயிரத்து 302 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் அதிகரித்திருப்பது பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி வேகமாக முன்னேறி வருவதை சுட்டிக்காட்டுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.