கொரோனா தடுப்பு மருந்தை நாடு முழுவதும் விநியோகிப்பதற்கு, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரியில் தொடங்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ள நிலையில், அதை விநியோகிப்பதில் பல்வேறு உத்திகளையும் திட்டங்களையும் மத்திய அரசு இறுதி செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் கைகோக்கவுள்ள மத்திய அரசு, கோவின் (CoWIN) என்ற புதிய டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, "இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் கண்டுபிடிப்பாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தை 'கோவின்' தளத்தின் வாயிலாக வழங்கும் மிகப் பெரிய சவாலில் கண்டுபிடிப்பாளர்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறேன்" என்றார்.
எம்எஸ்ஹெச் (MSH) என்று அழைக்கப்படும் மெய்ட்டி ஸ்டார்ட்அப் ஹப் (MeitY Startup Hub) என்னும் இணையதளத்தில் இந்தத் தளம் அமைக்கப்படவிருக்கிறது.
அதன்படி, https://meitystartuphub.in/ என்ற தளத்தில் இப்போது பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பங்கேற்பாளர்கள் ஜனவரி 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சிறந்த 5 விண்ணப்பதாரர்களுக்கு தங்களது தீர்வுகளை தளத்தினோடு ஒருங்கிணைத்து செயல்பட வாய்ப்பு வழங்கப்படும். இதுதவிர அவர்களுக்கு பல்வேறு பரிசுகளும் வாய்ப்புகளும் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.