வணிகம்

`தேவைக்கேற்ப மாத்திக்கலாம்‘ - இந்தியாவில் வரப்போகுது 2 in 1 வாகனம்! அரசு வெளியிட்ட செய்தி

நிவேதா ஜெகராஜா

3 சக்கர வாகனமாக மாற்றிக்கொள்ளக் கூடிய 2 சக்கர வாகனங்கள் இந்தியாவில் எதிர்காலத்தில் விற்பனைக்கு வர உள்ளன. இவ்வகை வாகனங்களுக்கான வரைவு விதிமுறைகளை மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இணையதளத்தில் உள்ள இவ்விதிமுறைகள் குறித்து பொது மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 சக்கர வாகனமாகவும் மாற்றிக்கொள்ள கூடிய 2 சக்கர வாகனம், 3-வது சக்கரத்தை பயன்படுத்தி வணிக ரீதியிலான போக்குவரத்துக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இரு சக்கரம் மட்டும் உள்ள வாகனத்தில் 3ஆவது சக்கரத்தையும் பொருத்திக்கொள்ளும் வகையில் வடிவமைப்பு இருக்கும்.

இவ்வகையிலான புது வகை மாதிரி வாகனத்தை குவார்க் ஒன் என்ற பெயரில் ஹீரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வாகனங்களுக்கு மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் தரும் பட்சத்தில் அவை வணிக ரீதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது