பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், அதற்காக கலால் வரியை குறைக்கும் திட்டமிட்டமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அரசுத் துறை உயரதிகாரிகள், கலால் வரியை குறைத்தால் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிவித்தனர். இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் நடத்திய நாடு தழுவிய போராட்டத்துக்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை என பாரதிய ஜனதா மூத்த தலைவரும், மத்திய சட்ட அமைச்சருமான ரவிஷங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
மக்கள் ஆதரிக்கவில்லை என்பதால், எதிர்க்கட்சியினர் வன்முறையைக் கையில் எடுத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச நிலவரமே காரணம் என்று கூறியுள்ள அவர், இந்த நிலைமை தாற்காலிகமானது தான் என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 21 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.