வணிகம்

அரசு இ-சந்தை : கூட்டுறவு அமைப்புகள் கொள்முதல் செய்யலாம்

webteam

கூட்டுறவு அமைப்புகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்ய உதவும் வகையில், அரசு இ-சந்தை கொள்முதல் விரிவாக்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது வரை, அரசு இ-சந்தை மூலம் பொருட்களை கூட்டுறவு அமைப்புகள் விற்பனை செய்து வருகின்றன.

இனி அரசு அமைப்புகளை போலவே கூட்டுறவு அமைப்புகளும் பொருட்களை வாங்குவோர் பட்டியலில் இணைக்கப்பட்டு அரசு இ-சந்தை மூலம் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாகூர் அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு அறிவித்தார்.

2016 ஆகஸ்ட் 9-அன்று தொடங்கப்பட்ட அரசு இ-சந்தையில் மத்திய- மாநில அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை கொள்முதல் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது கூட்டுறவு அமைப்புகளை வாங்குவோராக அனுமதித்திருப்பதன் மூலம் 27 கோடி உறுப்பினர்களை கொண்டுள்ள 8.54 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு அமைப்புகள் பயனடையும் என தாகூர் தெரிவித்தார்.

-கணபதி