வணிகம்

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை - உடனடி அமல்

Rasus

வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் அனைத்து வகையான வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வியாபாரிகள் கையிருப்பு வைப்பதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வெங்காயம் கிலோ 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலையும் 4 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்து மலிவு விலைக்கு விற்பனை செய்வது, வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என விலையேற்றத்தை கட்டுப்படுத்த‌ பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை விதித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை‌ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டிலேயே வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை அதிகரித்து வருவதால், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என அனைத்து வகையான வெங்காயத்தின் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உடனடியாக அ‌மலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில்லறை வியாபாரிகள் 100 குவிண்டால் வரையும் மொத்த வியாபாரிகள் 500 குவிண்டால் வரை மட்டுமே கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மழைக் காலம் நெருங்கி வரும் நிலையில், வெங்காயத்தின் விலை மேலும் உயரக் கூடிய அபாயம் ஏற்படும் ‌என்பதால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.