வணிகம்

ஆஸ்திரேலியாவில் கூகுளை நிறுத்துவோம் என எச்சரிக்கை: காரணம் என்ன?

webteam

உலக அளவில் மிகவும் பிரபலமான கூகுள் நிறுவனம் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுகின்றனர். அந்த சேவைக்கு கூகுளும் கணிசமான தொகையை விளம்பர நிறுவனங்களிடம் இருந்து பெறுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில், செய்தி நிறுவனங்களின் செய்திகளை கூகுள், ஃபேஸ்புக் பயன்படுத்தும்போது அதற்கான தொகையை செய்தி நிறுவனங்களுக்கு கூகுள் செலுத்த வேண்டும் என புதிய கொள்ளை முடிவை ஆஸ்திரேலியா அரசு எடுத்துள்ளது. இதற்காக செய்தி நிறுவனங்களும் கூகுளும் பேச்சுவார்தை நடத்த வேண்டும் எனவும் இதில் உடன்பாடு எட்டப்படவில்லையெனில், அரசே நியமனம் செய்யும் நடுவர் குழு செய்திகளுக்கான தொகையை முடிவு செய்யும் எனவும் ஆஸ்திரேலியா அரசு கூறுகிறது. ஆனால் ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவுக்கு கூகுள் நிறுவனம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக கூகுள் நிறுவன ஆஸ்திரேலிய மேலாளர் மேல் சில்வா செனட் கூறும்போது, “ ஆஸ்திரேலிய கொண்டு வந்துள்ள புதிய சட்டமானது நடைமுறைக்கு வந்தால் ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுதல் தள சேவையை நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.” என்றார்.

கூகுளுடன் ஃபேஸ்புக் நிறுவனமும் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் பயனாளர்கள் தங்கள் தளங்களில் செய்திகளை பகிர்வதையும் நிறுத்துவோம் எனக் கூறியுள்ளது.

கூகுளின் இந்த சேவையானது நிறுத்தப்படும்பட்சத்தில் 19 மில்லியன் ஆஸ்திரேலிய மக்கள் கூகுள் சேவையின் தேடுதல் தளம் மற்றும் யூடியூப் சேவைகளை பெருவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறும்போது “ ஆஸ்திரேலியாவிற்கு பணி செய்ய வருகிறவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், மிரட்டல்களுக்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம்” என்றார்.