வணிகம்

இனி ‘ஃபேர் அண்ட் லவ்லி’ என்பதில் ‘ஃபேர்’ என்ற வார்த்தை இருக்காது .. காரணம் இதுதான்..!

webteam

‘ஃபேர் அண்ட் லவ்லி’என்ற அழகு சாதன பொருளில் இருக்கும் ‘ஃபேர்’ என்ற வார்த்தையை நீக்கப் போவதாக அதனை தயாரிக்கும் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் பெண்கள், மற்றும் ஆண்கள் என பாலின வேறுபாடு இல்லாமல் மிக அதிக அளவு உபயோகிக்கப்படும் அழகு சாதன பொருள் ‘ஃபேர் அண்ட் லவ்லி’. இது ஒரு ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இதனை பலர் தங்களின் சிவப்பழகை கூட்டுவதற்காக பயன்படுத்தி வருகின்றனர். அந்த நிறுவனமும் இதனை பயன்படுத்தினால் அனைவரும் சிவப்பாக மாறிவிடலாம் என்றே பல ஆண்டுகளாக விளம்பரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இதனை தயாரிக்கும் ஹிந்துஸ்தான் நிறுவனம், தங்களின் தயாரிப்பு பொருளில் உள்ள ‘ஃபேர்’ என்ற வார்த்தையை நீக்கப் போவதாக கூறியுள்ளது. உலகம் முழுவதும் கறுப்பின மக்களின் மீது நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக இந்தப் போராட்டம் அமெரிக்காவையே முடங்கச் செய்துள்ளது. கறுப்பு என்பது அழகு குறைவானது. சிவப்பாக மாறுவதே அழகு எனப் பொருள் தரும்படி உள்ளதால் இந்த முடிவை ஹிந்துஸ்தான் எடுத்துள்ளது. இந்தப் பெயரை மாற்றுவதற்கான ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அது பெறப்பட்ட பிறகு பெயரை மாற்றப் போவதாகவும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த மாற்றம் சில மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் கூறியுள்ளது.

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ இந்தியாவில் விற்கப்படும் தங்களது இரண்டு தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்துபோவதாக அறிவித்த ஒரு வாரத்திற்குப் பிறகு ஹிந்துஸ்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவில் மட்டும் ‘ஃபேர் அண்ட் லவ்லி’ என்ற அழகு சாதன பொருள் ஏறக்குறை ஆண்டிற்கு 560 மில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.