புதிய தங்க நகை கடன் விதிமுறைகளுக்கு விஜய் எதிர்ப்பு pt
தங்கம்

தங்கத்தின் மொத்த மதிப்பில் 75% தான் கடன்.. RBI-ன் 9 புதிய விதிமுறைகள்! விஜய் எதிர்ப்பு!

தங்க நகை கடன் சார்ந்து ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகள் மக்களை மிகப்பெரிய துயரத்திற்கு தள்ளும் என்றும், அதனை உடனடியாக அவற்றை திரும்ப பெறவேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

Rishan Vengai

நகைக்கடன் வழங்குவதில் சமீபகாலமாக ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் நலன் காக்கவே இந்த விதிமுறைகளை அமல்படுத்தி வருவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

ஆனால் சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த தங்கத்தின் மொத்த மதிப்பில் 75% தான் கடன் வழங்கப்படும் என்ற விதிமுறை உள்ளிட்ட 9 புதிய விதிமுறைகள் பொதுமக்களுக்கு சிரமத்தை கொடுக்கும் வகையிலேயே இருந்தது. இது முழுக்க முழுக்க மக்களை சிக்கலுக்குள் தள்ளும் விதமாகவே இருப்பதாக பல்வேறு தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டது.

தங்க நகை கடன்

இந்நிலையில் ரிசர்வ் வங்கி அறிவித்த தங்க நகைக் கடன் சார்ந்த 9 புதிய விதிமுறைகளை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மக்கள் சிரமப்படுவார்கள் என்று RBI-க்கு தெரியாதா?

தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் தவெக தலைவர் விஜய், “ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் நகைக்கடன் பெறும் வழிமுறைகளைத் திருத்தி, புதிதாக 9 விதிமுறைகள் வெளியிட்டிருப்பதை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

உலகிலேயே தங்கத்தை அதிகமாக நுகரும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா தான். இந்தியர்கள். தங்கத்தைத் தங்கள் சொத்தின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். தங்கம் என்பது திருமணம் போன்ற இன்ன பிற விசேஷ நிகழ்ச்சிகளின்போது மட்டுமே ஆபரணமாக அணியப்படுகிறது. மற்றபடி, தங்க நகைகளை ஏழை, நடுத்தர மக்கள், வாகனம், நிலம், வீடு போன்ற அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் வாங்குவதற்கும், கல்வி, விவசாயம், மருத்துவம் போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்கும் வங்கிகளில் அடமானம் வைத்துத்தான் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய விதிகளில், தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதற்கான உரிமையாளர்கள் தாங்கள்தான் என்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும். குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

நகைகளை வாங்கியதற்கான ரசீது இல்லாதவர்கள். அதற்குப் பதிலாக வேறு ஆவணங்களையோ, உறுதிமொழிச் சான்றையோ அளித்துக் கடன் பெறலாம் என்றும், அவற்றில் சந்தேகம் இருந்தால் கடன் வழங்கக் கூடாது என்றும் சொல்லியிருப்பதால். நகைக்கடன் மறுக்கப்படும் சூழல் உருவாகும். ஏனெனில், பல குடும்பங்களில் இன்றும் பாட்டியின் நகைகளே தாய்க்கும் அவரது மகளுக்கும் மருமகளுக்கும் கொடுக்கப்பட்டு வரும் நடைமுறை, பல தலைமுறைகளாக இருந்து வருகிறது. அப்படியிருக்கையில், அவற்றிற்கான ரசீதையோ, ஆவணத்தையோ அவர்கள் எங்குபோய்ப் பெற முடியும்?

மேலும், ஒரு பக்கம் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு எகிறிக்கொண்டிருக்க. மறுபக்கம் தங்கத்தை அடமானம் வைத்துப் பெறப்படும் தொகையோ குறைந்துகொண்டே போனால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பது ரிசர்வ் வங்கிக்குத் தெரியாதா?

விதிகளை திரும்ப பெறவேண்டும்!

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளில். கடன் தொகை வழங்கும் அளவானது தங்கத்தின் மொத்த மதிப்பில் இருந்து 75 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடன் தொகையையும் குறைத்தால். பணம் அதிகம் தேவைப்படுவோர் அதிக வட்டி வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்களையும், கந்து வட்டிக் கும்பலையுமே நாடிச் சென்று தங்க நகைகளை அடகு வைக்கும் சூழல் ஏற்படும். இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள். மீளாத் துயருக்கு ஆளாக நேரிடும்.

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளில் இத்தகைய நடைமுறைச் சிக்கல்கள் ஒரு புறம் இருக்க. வங்கிகளால் விற்பனை செய்யப்படும் தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும் என்பது போன்ற புதிய விதி, மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும். இந்தப் புதிய விதியால், வேறு ஆதாரங்களில் இருந்து தங்க நாணயங்களை வாங்கியவர்கள் நகைக் கடன் பெற முடியாத சூழல் உருவாகி உள்ளது.

தங்கம் விலை

மேலும், ஏற்கெனவே நகைக்கடன் பெற்றவர்கள் அதற்கு வட்டித் தொகை மட்டுமே செலுத்தி அதை அப்படியே புதுப்பித்துக் கொள்ள முடியாது என்றும். அபகு வைத்த நகையை முழுவதுமாக மீட்டு, அடுத்த நாள் தான் மீண்டும் அடகு வைத்துக் கடன் பெற முடியும் என்ற புதிய நிபந்தனையால் மக்கள் இன்னும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவர்.

எனவே, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிகளை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நகைக் கடன் பெறுவதில் பழைய நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.