தங்கம் விலை உயர்வு web
தங்கம்

இதுக்கு இல்லையா சார் ஒரு END.. ஒரு சவரன் ரூ.1.75 லட்சமாக உயருமா? அதிர்ச்சி தகவல்!

5 ஆண்டுகளில் தங்கம் ஒரு சவரன் ஒன்றரை லட்சம் ரூபாயை தாண்டி விற்கப்படும் என சர்வதேச ஆய்வு நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

PT WEB

சர்வதேச சந்தையில் வரும் 5 ஆண்டுகளில் தங்கம் விலை ஒரு ட்ராய் அவுன்ஸ் 8 ஆயிரத்து 900 டாலர்கள், அதாவது 7 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயாக உயர வாய்ப்புள்ளதாக முதலீடு மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனமான INCREMENTUM தெரிவித்துள்ளது.

ஒரு ட்ராய் அவுன்ஸ் என்பது 31.1 கிராமாக கணக்கிடப்படும் நிலையில், ஆபரணத் தங்கம் ஒரு கிராம் சுமார் 22 ஆயிரம் ரூபாயாகவும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயாகவும் உயர வாய்ப்பிருப்பதாக INCREMENTUM தெரிவித்துள்ளது.

தங்கம் விலை

அடுத்த 5 ஆண்டுகளில் விலைவாசி உயர்வை குறிக்கும் பணவீக்கம் எப்படி இருக்கும் என்பதை கணக்கில் கொண்டே தங்கம் விலை உயர்வு இருக்கும் என INCREMENTUM கூறியுள்ளது. சர்வதேச அளவிலான பணவீக்க விகிதத்தை பொறுத்து தங்கம் விலையின் இலக்கு 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் முதல் 7 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வரையில் இருக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவிலான நாடுகளின் நிதிக்கொள்கை, பணவீக்க போக்கு, சர்வதேச அரசியல் சூழல்களும் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என INCREMENTUM கூறியுள்ளது.

எதனால் விலை உயர்வு ஏற்படும்..

முன்னதாக, சர்வதேச சந்தையில் வரும் 4 ஆண்டுகளில் தங்கம் விலை 2 மடங்காக உயரக்கூடும் என ஜேபி மோர்கன் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சர்வதேச சந்தையில் தங்கம் விலை தற்போது ட்ராய் அவுன்ஸ் 3 ஆயிரத்து 300 டாலர் அளவில் வர்த்தகமாகும் நிலையில், 2029ஆம் ஆண்டில் 6 ஆயிரம் டாலர்களாக, அதாவது 5 லட்சம் ரூபாயாக உயரக்கூடும் என ஜேபி மோர்கனின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு தங்கத்தின் மீது தேவை அதிகரித்துக்கொண்டே சென்றாலும், விநியோகம் குறைந்து வருவதாக ஜேபி மோர்கன் கூறியுள்ளது. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் அந்நிய செலாவணியை கரன்சியாக மட்டுமே வைத்திருக்காமல் தங்கத்தையும் அதிகளவு வாங்கத் தொடங்கின. இதுதவிர, அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பு, பட்ஜெட் பற்றாக்குறை, அமெரிக்காவின் நிதிச்சந்தை மீதான நம்பிக்கை குறைந்ததும் தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என ஜேபி மோர்கன் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்பது, INCREMENTUM, ஜேபி மோர்கன் என்ற சர்வதேச ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கைகள் மட்டுமே.. ஆபரணத் தங்கம் விலை இப்போதே புதிய உச்சத்தின் அருகில் விற்பனையாகி வரும் சூழலில், மேலும் உயர வாய்ப்புள்ளதாக வெளியாகும் கணிப்புகள் சிறிய அச்சத்தையே உருவாக்குகிறது. இருப்பினும், தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், தங்களின் போர்ட்ஃபோலியோவில் எவ்வளவு தொகையை அதற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்.