செய்தியாளர் கௌசல்யா
தங்கம் என்றாலே இந்தியர்களுக்கு அலாதி பிரியம்தான். தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் அதை துரத்திப்பிடித்து வாங்குவதை பழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். இதற்கு, மகளின் திருமணம், உறவுகளுக்கு சீர்வரிசை என பல்வேறு காரணங்களை பட்டியலிடுவார்கள் நம் மக்கள்.
2024ஆம் ஆண்டிலேயே தங்கம் புதிய உச்சத்தை எட்டியதை பார்த்திருப்போம். 2024ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி தங்கம் ஒரு சவரன் 47 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த நாட்களில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி தங்கம் இதுவரை இல்லாத அளவாக 59 ஆயிரத்து 640 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. அந்த விலையேற்றம் இந்த ஆண்டும் தொடர வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை தொடரும் பட்சத்தில் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டக்கூடும் எனக் கூறுகின்றனர். பல நாடுகளில் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவது, வட்டி விகிதங்கள் குறைவாக இருப்பது போன்றவையும் காரணங்களாக கூறப்படுகிறது.
பண்டக சந்தையில் 10 கிராம் தங்கம் விலை 85 ஆயிரம் ரூபாய் முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை உயர வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கும் பொருளாதார நிபுணர்கள், இது ஆபரணத் தங்கத்தின் விலையிலும் எதிரொலிக்கும் எனக் கூறுகின்றனர். இதுபோன்ற காரணங்களால் 2025ஆம் ஆண்டில் தங்கம் விலை ஏற்றத்துடனே இருக்க வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் நகை வணிகர்கள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி.
அவசியத் தேவை இருப்பின் ஆபரணத் தங்கம் வாங்கலாம். இல்லையெனில், தங்கத்தில் பலவகைகளில் முதலீடு திட்டங்கள் உள்ளன. ரிஸ்க் எடுப்பதற்கான அளவை பொறுத்து அவரவருக்கு ஏற்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.