தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு லட்சத்தை நெருங்கியிருந்த நிலையில், இன்று மீண்டும் ரூ.2,000 குறைந்துள்ளது.
ட்ரம்பின் வரி விதிப்பின் காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையின்மை காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி அதில் முதலீட்டைக் குவித்துவருகின்றனர். உலக அளவில் மத்திய வங்கிகளும் தங்கத்தின் இருப்பை அதிகரித்துவருகின்றன.
இதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்துவருகிறது. பண்டிகை மற்றும் திருமண நிகழ்வுகளுக்காக தங்கம் வாங்க நினைக்கும் மக்களுக்கு தங்க விலை உயர்வு நெருக்கடியாக அமைந்துள்ளது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் நேற்று புதிய உச்சத்தை தொட்டது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து 97 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல கிராமுக்கு ரூ.300 உயர்ந்து 12 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் வெள்ளி விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிந்தது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,000 சரிந்து ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்தசூழலில் இன்று தங்கம் விலை ரூ.2,000 குறைந்து 95 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.