தங்கம் web
தங்கம்

வீட்டில் எவ்வளவு தங்கம் வைக்கலாம்.. ஆண்களுக்கு எவ்வளவு? பெண்களுக்கு எவ்வளவு? விதிமுறைகள் இதான்!

வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக்கொள்ளலாம்? வரம்பிற்கு மேல் தங்கம் வைத்திருந்தால் என்னவாகும்? தங்கத்தை வைத்துக் கொள்வதற்கான விதிமுறைகள் என்னென்ன? அதனை விற்பனை செய்யும் போது எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

PT WEB

வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக்கொள்ளலாம்? வரம்பிற்கு மேல் தங்கம் வைத்திருந்தால் என்னவாகும்? தங்கத்தை வைத்துக் கொள்வதற்கான விதிமுறைகள் என்னென்ன? அதனை விற்பனை செய்யும் போது எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

உலகில் மிக பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை மக்கள் கருதுவதால்தான், பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி சமயங்களில் தங்கத்தில் அதிக முதலீட்டை குவித்து வருகின்றனர். தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பால் சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காணப்படும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். உலகில் தங்க சேமிப்பில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதனால், தங்கம் விலை உயரும்போது தங்கத்தை சேமித்து வைத்திருக்கும் இந்திய குடும்பங்களின் செல்வ மதிப்பும் உயர்கிறது.

தங்கம்

தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்து வந்தாலும் ஒரு கிராம் தங்கமாவது இல்லாமல் இந்தியர்கள் சுபகாரியங்களை செய்வதில்லை. அதை அவர்கள் கெளரவமாகவும் சொத்தாகவும் கருதுகின்றனர்.. மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கோடிட்டுக் காட்டியுள்ளபடி, அறிவிக்கப்பட்ட வருமானம், விலக்கு அளிக்கப்பட்ட வருவாய் , "நியாயமான வீட்டுச் சேமிப்புகள்" அல்லது விளக்கக்கூடிய ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட சட்டப்பூர்வமாகப் பெற்ற பணம் ஆகியவற்றில் தங்கம் வாங்குவது வரிவிதிப்புக்கு உட்பட்டது அல்ல. மேலும், தங்க நகைகள் அல்லது ஆபரணங்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குக் மேல் அதிகமாக வீட்டில் வைக்கக்கூடாது..

ஆணுக்கு எவ்வளவு.. பெண்ணுக்கு எவ்வளவு..?

இதில் ஒரு திருமணமான பெண் 500 கிராம் வரையும் .. திருமணமாகாத பெண் 250 கிராம் வரையும் வைத்திருக்கலாம். அதே ஒரு ஆண் திருமணமானாலும் ஆகாவிட்டாலும் 100 கிராம் வரை தங்கத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.. வீட்டில் எத்தனை பேர் உள்ளார்களோ அத்தனை அளவில் வைத்துக்கொள்ளலாம்..

தங்கம் விலை

இந்தியாவில், ஒருவர் சட்டப்பூர்வமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதற்கு நிலையான வரம்பு எதுவும் இல்லை. இருப்பினும், வருமான வரித் துறை, தங்கம் வைத்திருக்கும் அளவு உங்கள் அறிவிக்கப்பட்ட வருமானம் மற்றும் சட்டப்பூர்வமான நிதி ஆதாரத்துடன் ஒத்துப்போக வேண்டும் என்று கோருகிறது. தனிநபர்கள் வருமானச் சான்றுகள், கொள்முதல் பில்கள் அல்லது பரம்பரை ஆவணங்கள் மூலம் தங்கம் வைத்திருப்பதை நியாயப்படுத்த வேண்டும். சரியான ஆதாரங்கள் இல்லாமல், அதிகப்படியான தங்கம் இருந்தால் அதை பறிமுதல் செய்யலாம் அல்லது வரி விதிக்கலாம் என்கிறது..

தங்கம் விலை உயர்வு!

அத்துடன் உறவினர்களிடமிருந்து பரிசாகவோ அல்லது பரம்பரை பரம்பரையாகவோ பெறப்பட்ட தங்கத்திற்கு வரி விலக்கு உண்டு. இருப்பினும், அவை ₹50,000 க்கு மேல் மதிப்புள்ளதாக இருந்தால், அது "பிற மூலங்களிலிருந்து வரும் வருமானம்" என்று வரி விதிக்கப்படும் என்ற விதிகள் உள்ளது..

உங்கள் நகையை விற்றால் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்..

அதுமட்டுமல்லாமல் தங்கத்தை விற்பனை செய்ய வேண்டுமானால் குறுகிய கால கேபிடல் லாப வரி உங்களுக்கு விதிக்கப்படும். அதாவது தங்கம் வாங்கிய 3 ஆண்டுகளில் அதை விற்பனை செய்தால், இந்த வரியை உங்கள் வருமான கணக்குடன் இணைத்து, அந்த வரியுடன் சேர்த்து கட்டலாம். அதுவே நீங்கள் நீண்டகாலத்திற்குப் பிறகு தங்கத்தை விற்பனை செய்தால் 20 சதவீதம் வரியும் தேவைப்பட்டால் 4 சதவீத செஸ் வரியும் விதிக்கப்படும்.

டிஜிட்டல் தங்கம் வாங்கினால் ஜிஎஸ்டி வரி மட்டும் செலுத்தினால் போதுமானது. டிஜிட்டல் தங்கம் வாங்குவதற்கு எந்தவித உச்சவரம்பும் கிடையாது. ஆனால், ஒரு நாளில் ரூ.2 லட்சத்திற்கு மட்டுமே டிஜிட்டல் தங்கத்தை வாங்க முடியும்.. இதை 3 ஆண்டுகளில் விற்பனை செய்தால் வரி ஏதும் கிடையாது. அப்படி 3 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் தங்கத்தை விற்கும்போது நீண்ட கால மூலதன ஆதாய வரி என 20% வரியும் செஸ் வரியும் செலுத்த வேண்டியிருக்கும்.

தங்கம்

தங்கப்பத்திரம் வாங்கி முதலீடு செய்வோருக்கு ஜிஎஸ்டி இல்லை அதே சமயம் தங்க பத்திரத்தின் மீது கிடைக்கும் 2.5 சதவீத வட்டிக்கு நீங்கள் வருமான வரி கட்ட வேண்டும். மேலும் 8 ஆண்டுகள் கழித்து விற்பனை செய்தால் எந்தவித வரியும் கிடையாது.

ஆக தங்க நகைகளை எவ்வளவு வேண்டுமானாலும் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். அதில் கட்டுப்பாடுகள் கிடையாது. அதே நேரம் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகத் தங்கம் வைத்திருந்தால் அதை எங்கிருந்து வாங்கினீர்கள் அல்லது பரிசாக கிடைத்ததா? என்பதற்கு தகுந்த ஆதாரங்களுடன் கூடிய விளக்கத்தை அளிக்க வேண்டும்..