தங்கத்தின் விலை முதல்முறையாக சவரனுக்கு 25 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.
தங்கம் என்பது ஒரு உலோகம் என்பதையும் தாண்டி இந்திய மக்கள் மனங்களில் கலந்துவிட்ட ஒரு மங்கலப் பொருளாகவே மாறிவிட்டது. அணிந்து அழகு பார்க்க மட்டுமல்ல. அவசர கால பணத் தேவைக்கும் உடனடியாக உதவும் சிறந்த முதலீடாக உள்ளது. மஞ்சள் நிற உலோகத்தின் விலை கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 25 மடங்கு அதிகரித்துள்ளதாக வியக்க வைக்கின்றன புள்ளிவிவரங்கள். 1980ம் ஆண்டில் தங்கத்தின் விலை சவரன் ஆயிரம் ரூபாய் என்ற 4 இலக்க அளவை தொட்டது.
இதன் பின் 2004ம் ஆண்டு சவரன் 5 ஆயிரம் ரூபாயாகவும் 2008ம் ஆண்டு 10 ஆயிரம் ரூபாயாகவும் தங்கம் விலை உயர்ந்தது. அடுத்த சில ஆண்டுகளில் மின்னல் வேகத்தில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 2010ம் ஆண்டு 15 ஆயிரம் ரூபாயைத் தொட்ட சவரன் விலை, அடுத்த ஆண்டே 20 ஆயிரம் ரூபாயைக் கடந்து நடுத்தர மக்களை மிரள வைத்தது. அதன்பின் தங்கத்தின் விலை அதிக ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து 2019ம் ஆண்டில் முதன்முறையாக 25 ஆயிரம் ரூபாய் என்ற அடுத்த மைல் கல்லை எட்டியுள்ளது. தற்போதைய விலையேற்றத்திற்கு சர்வதேச நிலவரங்களே முக்கிய காரணம் என்கின்றனர் நகை வணிகர்கள்.
தங்கம் சிறந்த முதலீடு என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வரும் நிலையில், அதில் மட்டுமே பணத்தை முதலீடு செய்வது சரியானதல்ல என எச்சரிக்கின்றனர் முதலீட்டு ஆலோசகர்கள். மேலும், தங்கத்தில் முதலீடு என முடிவு செய்துவிட்டால் நீண்ட கால நோக்கில் செய்வதே சரி என்றும் அவர்கள் கூறுகின்றனர். தங்கத்தை நகையாக வீட்டிலும் வங்கி லாக்கரிலும் வைத்திருப்பது தற்போது பாதுகாப்பற்றதாக மாறி வரும் நிலையில், அரசே வெளியிடும் தங்க முதலீட்டுப் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் இருப்பதையும் ஆலோசகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.