வணிகம்

முடிந்தது அட்சய திருதியை - மீண்டும் உயர்வில் தங்கத்தின் விலை! ஒரு சவரன் விலை என்ன?

நிவேதா ஜெகராஜா

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 544 ரூபாய் உயர்ந்துள்ளது. அட்சய திருதியைக்கு முந்தைய நாளான மே 2ஆம் தேதிதான் ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்து, ஒரு சவரன் 38,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் மே 3ஆம் தேதி அட்சய திருதியை அன்று, தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்து 38,368 ரூபாய் என்றானது. இந்நிலையில், நேற்று சவரனுக்கு 96 ரூபாய் தங்கம் விலை உயர்ந்தது. தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 56 ரூபாய் விலை உயர்ந்து 4,864 ரூபாய்க்கும், ஒரு சவரன் 448 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 38,912 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் விலை உயர்ந்து ரூ.68.30-க்கு விற்பனையாகிறது. 

முன்னதாக அட்சய திருதியை அன்று தமிழகத்தில் மொத்தம் 18 டன் தங்கம் விற்பனையானது குறிப்பிடதக்கது. 2019 ஆம் ஆண்டைவிட 30 விழுக்காடு அதிகம் என தங்க வணிகர்கள் இதை தெரிவித்துள்ளனர். அட்சய திருதியை நாளில் தங்க நகை வாங்கினால் அது மேன்மேலும் பெருகும் என்ற ஐதீகம் தமிழக மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே அன்றைய தங்க நகைகள் விற்பனை வெளிப்படுத்தியதாக கடை உரிமையாளர்கள் பலரும் தெரிவித்தது உறிப்பிடத்தக்கது.