2025 தொடங்கி இன்னும் மூன்று மாதமே முழுவதுமாக முடியவில்லை. அதற்குள் தங்கம் 13 சதவிகிதத்திற்கு மேல் அதிகரித்துவிட்டது. இந்த ஆண்டு தொடக்கத்திற்கு முன்பிருந்தே விழ ஆரம்பித்த பங்குச்சந்தை முதலீடுகள் இன்னும் எழுந்த பாடில்லை. யாரெல்லாம் தங்கத்திலும், வெள்ளியிலும் முதலீடு செய்தார்களோ, அவர்கள் மட்டும் தான் 2025ம் ஆண்டு கொஞ்சம் சிரிக்க முடியும் என்னும் அளவுக்குத்தான் பொருளாதார சூழல் இருக்கிறது. அத்தகைய நபர்களுக்கு மேலும் நல்ல செய்தியை அளித்திருக்கிறது அமெரிக்காவின் FED RATE CUT தகவல்கள்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றது முதல் உலகம் முழுக்கவே பொருளாதாரத்தில் ஒரு குழப்ப நிலை தொடர்கிறது. அவர் எடுக்கும் தடாலடியான முடிவுகள் பெரு நிறுவனங்களையே அசைத்துப் பார்க்கின்றன. வர்த்தகப் போர் என்னும் ஆயுதத்தை வைத்து உலகையே மிரட்டிக்கொண்டிருக்கிறார்.
“பண வீக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதற்கு வரி விதிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்” என பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார் அமெரிக்காவின் ஜெரோம் பவல். இந்த ஆண்டு எப்படியும் இரண்டு RATE CUT இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெரோம் பவல் இப்படியாக பேசுவதற்கும், தங்க விலை அமெரிக்காவில் புதிய உச்சம் தொடர்வதற்கும் சரியாக இருந்தது. அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 0.71 சதவிகிதம் உயர்ந்து 3062.80 டாலர்களுக்கு வர்த்தகமாகியிருக்கிறது. இந்த விலையேற்றம் இந்திய தங்க விலையிலும் எதிரொலிக்க வாய்ப்புகள் அதிகம்.
அதே சமயம், தங்க விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதால், நகைக்கடைகளில் ஒருவித மந்தநிலை உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரண் ரூ.160 உயர்ந்து ரூ.66,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 8,310 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி தங்கம் விலை மேலும் மேலும் உயர்வது, எதை நோக்கி நகரப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கப் போகிறது.