தங்கத்தின் விலை கிராமிற்கு 73 ரூபாய் உயர்ந்து எப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 584 ரூபாய் அதிகரித்து 32,408 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 38 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,312 ரூபாய் விலை அதிகரித்திருக்கிறது. வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து 52 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவது நடுத்தர குடும்ப மக்களை கலக்கம் அடைய வைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 29,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை ஜனவரி 8ஆம் தேதி 31,432 ரூபாய் என புதிய உச்சம் கண்டது.
தொடர்ச்சியாக ஜனவரி 14ஆம் தேதி ஒரு சவரன் 30,112 ரூபாய்க்கும், பிப்ரவரி 8ஆம் தேதி 31,184 ரூபாய்க்கும், பிப்ரவரி 15ஆம் தேதி 31,392 ரூபாய்க்கும், பிப்ரவரி 20 ஆம் தேதி 31,840 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், ஆபரணத் தங்கம் இன்று எப்போதும் இல்லாத அளவாக ஒரு சவரன் 32,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.