வணிகம்

எல்ஐசியில் 20% வரை அன்னிய முதலீட்டுக்கு அனுமதி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Veeramani

எல்ஐசி நிறுவனத்தில் 20% வரை அந்நிய முதலீடு அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எல்ஐசி நிறுவனத்தின் 5% பங்குகளை IPO மூலம் விற்று 65000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பங்குகளை பொதுமக்களுக்கு விற்கும் திட்டத்தை இந்த நிதியாண்டின் இறுதிக்குள், அதாவது மார்ச் 31-ஆம் தேதிக்குள், நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போதைய அன்னிய முதலீடு விதிகளின்படி காப்பீட்டுத் துறையில் 74 சதவீதம் வரை அந்நிய முதலீடுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எல்ஐசி நிறுவனம் ஒரு தனி சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது, அந்த நிறுவனத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. IPO திட்டம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எல்ஐசி நிறுவனத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் போர் காரணமாக பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து ஓரளவுக்கு மீண்டுள்ள நிலையில், எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பதை தள்ளிப்போட வேண்டாம் என மத்திய அரசு கருதுகிறது. குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வாதத்தை பட்ஜெட் உரையில் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- கணபதி