வணிகம்

திண்டுக்கல்: வரத்து குறைவு; கூடுதல் விலைக்கு விற்கப்படும் வாழை இலைகள்

சங்கீதா

திண்டுக்கல்லில் ஒரு கட்டு வாழை இலை 2,500 ரூபாய்க்கும், ஒரு வாழை இலை 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

திண்டுக்கல்லை சுற்றியுள்ள பெரியகுளம், வத்தலகுண்டு, கோவிலூர், குட்டத்துப்பட்டடி, வக்கம்பட்டி, தாடிக்கொம்பு, செட்டிநாயக்கன்பட்டி உட்பட பல பகுதிகளில் வாழை மரங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. தற்போது வைகாசி மாதம் என்பதால், சுப முகூர்த்தங்கள் மற்றும் கோயில் திருவிழாக்கள் என அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திண்டுக்கல்லில் 250 பெரிய வாழை இலை கொண்ட ஒரு கட்டு ரூ.2500 முதல் 3000 வரை தரத்தைப் பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 400 வாழை இலை கொண்ட சின்ன கட்டு அதன் தரத்தைப் பொறுத்து ரூ.1000 முதல் ரூ.1700 வரை விற்பனை செய்யப்படுகிறது. சராசரியாக ஆயிரம் வாழை இலை கட்டுகள், நாள்தோறும் விற்பனைக்கு வரும். ஆனால் தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் வாழை இலைகள் கிழிந்து விடுகின்றது. இதனால் தற்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 கட்டுகள் வரையே விற்பனைக்கு வருகிறது. முகூர்த்த நாட்கள் என்பதாலும், வாழை இலை வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக தற்போது வாழை இலையின் விலை கூடுதலாக விற்கப்படுகிறது. சில்லறை விலை ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் வாழைமரம் பயிர் செய்த விவசாயிகளுக்கு லாபம் கிடைத்து வருகிறது. அதேநேரம் சாதாரண நாட்களில் 250 வாழை இலைகள் கொண்ட ஒரு கட்டு 500 முதல் 1000 வரை விற்பனை செய்யப்படும். சாதாரண நாட்களில் வாழை இலை விலை குறைவாக இருப்பதால், விவசாயிகளுக்கு போதிய அளவு லாபம் கிடைக்காத சூழ்நிலை நிலவி வருகிறது.

"ஓட்டல்களில் பார்சலுக்கு பிளாஸ்டிக் பேப்பரை பயன்படுத்துவதை விட வாழை இலைகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அதேபோல் அன்னதானம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் பாக்கு தட்டுகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதற்குப் பதிலாக வாழை இலைகளை பயன்படுத்த வேண்டும்" என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாழை இலையைப் அதிக அளவில் பயன்படுத்தினால் மட்டுமே விலை கூட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு போதுமான அளவு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.