வணிகம்

கடன் தள்ளுபடியால் நேர்மை சீர்குலையும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் கருத்து

Rasus

விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதன் மூலம் கடனை திருப்பிச் செலுத்தும் தனிநபரின் நேர்மை சீர்குலையும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறினார்.

மும்பையில் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் பெறும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாமல் 6.25 சதவிகிதமாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. மாறாக, ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 6 சதவிகிதமாக இருக்கும் என முடிவு எடுக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் பணவீக்க விகிதம் 4.5 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.4 சத‌விகிதமாக ‌இருக்கும் என்றும், அமலாகவுள்ள ஜிஎஸ்டி வரி விகிதம் மற்றும் பருவ மழை ஆகியவற்றின் தாக்கம் பணவீக்கத்தில் எதிரொலிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் ரிசர்வ் வங்‌கி ஆளுநர் உர்ஜித் படேல் பேசினார். அப்போது, விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதன் மூலம் கடனை திருப்பிச் செலுத்தும் தனிநபரின் நேர்மை சீர்குலையும் என்று கூறினார். விவசாயக் கடன் தள்ளுபடியால் பணவீக்கத்தில் தாக்கம் ஏற்படும் என்றும் வங்கிகளின் நிதி நிலை பாதிக்கப்படும் என்றும் உர்ஜித் படேல் தெரிவித்தார். ரூபாய் மதிப்பு நீக்க நடவ‌டிக்கையால் ஏற்பட்ட கூடுதல் பணப் பரிமாற்றங்களை ரிசர்வ் வங்கி உள்வாங்கி முறைப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.