இந்திய வரலாற்றில் இதுவரை காணாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.20 என்ற அளவில் சரிந்து இன்றைய வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக இறுதியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.93 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியடைந்தது. பங்குச்சந்தை வர்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.20 ரூபாய்க்கு வர்த்தகமாகி வரலாறு காணாத வீழ்ச்சியடைந்து. இந்த வருடம் ஜனவரி முதல் தொடர்ந்து ரூபாயின் மதிப்பு 5 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது.
காரணம் என்ன?
அந்நிய முதலீட்டாளர்கள் பலர் பங்குகள் சரிவதை அடுத்து தங்களது பங்குகளை விற்கத் துவங்கி விட்டனர். கடந்த 5 மாதங்களில் மட்டும் இந்திய பங்குச் சந்தையில் இருந்து 2,15,000 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடு வெளியேறி உள்ளதாகவும் இதனால்தான் ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பண வீக்கம், நிதி சந்தைகளில் இருந்து அந்நிய முதலீடு வெளியேற்றம், ரஷ்ய - உக்ரைன் போர் காரணமாக பெட்ரோல் கொள்முதல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ரூபாய் மதிப்பின் சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது அமெரிக்காவில் நிலவிவரும் பணவீக்கம் தான். அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் அந்நாட்டின் பணவீக்கம் 40 வருடங்கள் இல்லாத அளவுக்கு எட்டியிருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த மே மாதத்தில் எரிபொருள் விலை சுமார் 34.6% உயர்ந்துள்ளது. இதனால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்த தீவிரம் காட்டியுள்ளது. அடுத்த சில தினங்களில் அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை 50 முதல் 75 புள்ளிகள் வரை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால்தான் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்று வருகிறார்கள். அந்நிய முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை பாதுகாப்பாக அமெரிக்க பங்குப் பத்திரங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். பத்திர லாபம் 3.15 சதவீதம் உயர்ந்ததை அடுத்து, டாலர் குறியீடு மீண்டும் 104 மதிப்பெண்களைத் தாண்டியது. இந்த தாக்கத்தால் ரூபாயின் மதிப்பும் சரிந்தது. எனவே அமெரிக்க சந்தை நிலையான வர்த்தக வளர்ச்சியை எட்டும்வரை, இந்திய பங்குச்சந்தையில் பெரும் ஏற்றத்தாழ்வு இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்..
இதையும் படிக்கலாம்: ஆதார் கார்டுடன் இணைக்கப்படுகிறதா வாக்காளர் அட்டை? மீண்டும் பரிந்துரை அனுப்பிவைப்பு