எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையே இந்தியாவில் இன்னும் சூடு பிடிக்கவில்லை. ஆனால், இந்தத் துறையில் போட்டியும் விவாதமும் சூடுபிடித்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு தமிழ் யூடியூபர் மதன் கெளரியின் ட்வீட் ஒன்றுக்கு பதிலளித்திருந்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் ரிப்ளைதான் இந்த சர்ச்சைக்கு தொடக்கப்புள்ளி.
'இந்தியாவில் எங்களுடைய கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். ஆனால், சர்வதேச அளவில் இந்தியாவில்தான் இறக்குமதி வரி உச்சபட்சமாக இருக்கிறது. பெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு இருக்கும் அதே நடைமுறைகளை எலெக்ட்ரிக் வாகனங்களிலும் இந்திய அரசு பின்பற்றுகிறது. சுற்றுச்சுழலை மேம்படுத்துவதற்கு ஏற்றவை அல்ல' என எலான் மஸ்க் அந்த பதிலில் தெரிவித்திருந்தார்.
எலான் மஸ்க் கூறியதைத் தொடர்ந்து, அதே கருத்தை ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தெரிவித்திருந்தார். "எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது குறைகப்படும் சில சதவீத இறக்குமதி வரியும் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தவிர, வரிகளை குறைப்பதன் மூலம் எலெக்ட்ரிக் வாகன சந்தை மிகப்பெரிய சந்தையாக உயரும்" என ஹூண்டாய் நிர்வாக இயக்குநர் கிம் கூறியிருந்தார்.
ஆனால், இதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பவிஷ் அகர்வால் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். "உள்நாட்டிலே நம்மால் போதுமான எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடியும். இறக்குமதியை நம்புவதை விட வெளிநாட்டு கார் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் ஆலை தொடங்குவதே சரியானதாக இருக்கும்" என அகர்வால் தெரிவித்திருக்கிறார்.
இந்த ட்வீட்டுக்கு பதில் அளித்த பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா, "நானும் டெஸ்லா காருக்காக காத்திருக்கிறேன். ஆனால், இந்தியாவில் பல எலெக்ட்ரிக் வாகன தொழிற்சாலைகள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
இந்தியாவில் அதிக தொழிற்சாலைகள் உருவாகும் பட்சத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும்" என்று கூறியிருக்கிறார்.
தொடர்புடைய செய்திக் கட்டுரை: எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை, விற்பனை உயர்வு... காரணம் என்ன? - ஓர் 'அப்டேட்' நிலவரம்