வணிகம்

இந்தியாவில் சேவையை நிறுத்தும் பிரபல இ-காமர்ஸ் நிறுவனம்: காரணம் என்ன?

EllusamyKarthik

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து விதமான பொருட்களையும் நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் துணையோடு அவரவர் இருக்கும் இடத்திலேயே பெற முடிகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கு முக்கியக் காரணம். குறிப்பாக இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலம் உலக அளவில் வணிகம் வளர்ச்சி கண்டுள்ளது. பெரும்பாலான முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்திய நாட்டை டார்கெட் செய்து தங்களது சேவையை வழங்கி வருகின்றன. 

அமேசான் தொடங்கி பல்வேறு வெளிநாட்டு இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருகிறது. அதில் ஒன்று தான் Shopee. சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனம். கடந்த ஆண்டு இந்தியாவில் தனது சேவையை தொடங்கியது இந்நிறுவனம். இந்நிலையில் தற்போது தங்களது வணிக இயக்கத்தை இந்தியாவில் நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ‘Free Fire’ செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை Garena வெளியிட்டிருந்தது. Garena மற்றும் Shopee  என இரண்டுக்கும் தாய் நிறுவனமாக இயங்கி வருகிறது Sea லிமிடெட். இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தால் தனது இ-காமர்ஸ் சேவையை Shopee நிறுத்திக் கொண்டுள்ளதாக சொல்லப்பட்டது. இருந்தாலும் அதனை அந்த நிறுவன தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

உலக சந்தையில் நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மை இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவன செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இயங்குதளம் கொண்ட போன்களில் டவுன்லோட் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இன்றுடன் (மார்ச் 29, 12 A.M) தங்களது சேவையை நிறுத்துவதாக Shopee தெரிவித்துள்ளது. இருந்தும் பொருட்களை ஆர்டர் செய்தவர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என உறுதி கொடுத்துள்ளது.