வணிகம்

ஏர்டெல், ஜியோ இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்து! - முடிவுக்கு வந்ததா போட்டி?

EllusamyKarthik

இந்திய டெலிகாம் துறையில் ஏர்டெல் நிறுவனத்திற்கும், ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்திற்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முட்டல் மோதல் இருந்து கொண்டே இருக்கும். கடந்த 2016இல் டெலிகாம் துறையில் நுழைந்த ஜியோ பெருவாரியான வாடிக்கையாளர்களை பெற்றதுதான் அதற்கு காரணம். இதனால் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழலை எதிர்கொண்டன. இந்த நிலையில்தான் ஏர்டெலும், ஜியோவும் தற்போது வியாபார ரீதியிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கைகளை இணைத்துள்ளன. 

ஏர்டெல் நிறுவனம் 800 MHz அலைக்கற்றையை ஜியோவுக்கு விற்பனை செய்கிறது. அது தொடர்பான ஒப்பந்தத்தில் தான் இரண்டு நிறுவனங்களும் கையெழுத்து போட்டுள்ளன. “இந்த ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தங்களுக்கு 1037.6 கோடி ரூபாயை ஜியோ கொடுக்கும்” என ஏர்டெல் நிறுவனம் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது. 

அதன் மூலம் டெல்லி, மும்பை மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள 800 MHz அலைக்கற்றையை ஜியோவிடம் கொடுத்துள்ளது ஏர்டெல். இதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் இடையிலான தொழில் போட்டி முடிவுக்கு வந்துள்ளதாகவே பார்க்கபடுகிறது. 

இந்த ஒப்பந்தத்தின் மூலம் டெல்லி, மும்பை மற்றும் ஆந்திர வட்டாரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் மேன்மை அடைந்த நெட்வொர்க் இணைப்பை பெறுவார்கள் என ஜியோ அறிக்கை வெளியிட்டுள்ளது.