கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி காரணமாக இந்தியாவில் 4 விற்பனை அலுவலங்களை ஆப்பிள் நிறுவனம் மூடவுள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் மும்பை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் குருகிராம் ஆகிய 4 நகரங்களில் விற்பனை அலுவலகங்களை நடத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் இந்த 4 அலுவலகங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் பேடிஎம் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் கொரோனா வைரஸ் எதிரொலியால் தங்கள் ஊழியர்களிடம் வீட்டிலிருந்து பணிபுரியும்படி அறிவுறுத்தியுள்ளன.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவில் உள்ள தங்கள் 5,000 ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியும் படி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனம் சார்பிலிருந்து வெளியாகியுள்ள தகவல்களில், சீனாவை தவிர்த்து உலகின் மற்ற இடங்களில் உள்ள அலுவலக ஊழியர்களை பாதுகாப்பான இடத்தில் இருந்து பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் எனவும், அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்பட்டால் போதிய ஏற்பாடுகளுடன், நீண்ட இடைவெளிகளுடன் அமர்ந்து பணிபுரிய வசதிகள் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அலுவலகங்களும் மிகச் சுத்தமாக தொடர்ந்து பராமரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.