Swiggy
Swiggy PT
வணிகம்

இனி ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.2 கட்டாய பிடித்தம்! Swiggy அறிமுகம் செய்த பிளாட்ஃபார்ம் கட்டணம்!

Rishan Vengai

ஸ்விக்கி, Zomato உள்ளிட்ட அனைத்து முன்னணி உணவு விநியோக நிறுவனங்களும், பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகின்றன. ஒவ்வொரு ஆன்லைன் ஆர்டர்களுக்கும் அதிகளவில் கட்டணங்களை விதித்துவருவதாக, வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், ஆர்டர்கள் குறைந்து வருவதால், உணவு நிறுவனங்கள் மந்தமான நிலையை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் உணவு விநியோக வணிகத்தில் பாதிக்கப்பட்டுள்ள வருவாயை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் ஸ்விக்கி இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

வணிக ரீதியாக ஏற்பட்டுள்ள மந்தநிலை!

முதலில் தொழில்ரீதியான மந்தநிலை தாக்கத்தை எதிர்கொண்டது ஸ்விக்கியின் போட்டியாளரான Zomato-தான். இதுகுறித்து முதலில் பேசியிருந்த Zomato CFO அக்ஷாந்த் கோயல், கடந்த அக்டோபர்-டிசம்பர் முடிவுகளின் படி, நாடு முழுவதுமே மந்தமான போக்கு காணப்படுகிறது என்றும், அதிலும் பெரிய நகரங்களில் கூட பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

zomato

இருப்பினும், Zomato இதுவரை எந்த தள கட்டணத்தையும் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் ஸ்விக்கி ஆனது, முதல் நிறுவனமாக பிளாட்ஃபார்ம் கட்டணத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.2 பிளாட்ஃபார்ம் கட்டணம்!

அதன்படி, முன்பெல்லாம் குறிப்பிட்ட தொகைக்கு மேலான ஆர்டர்களுக்கு, எக்ஸ்ட்ரா கட்டண பிடித்தங்கள் இல்லாமல் இருக்கும். ஆனால் தற்போது நீங்கள் ஒரு ஆன்லைன் ஆர்டரில் எத்தனை உணவை ஆர்டர் செய்திருந்தாலும் சரி, எவ்வளவு தொகைக்கு ஆர்டர் செய்திருந்தாலும் சரி, கட்டாயம் 2ரூபாய் பிடித்தம் செய்யப்படுவீர்கள்.

Swiggy

இது தனிப்பட்ட ஆர்டரில் தொடர்ந்து, பெரிய வணிகம் சார்ந்த ஆர்டர்கள் மற்றும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஆர்டர்களுக்கும் நீட்டிக்க இருப்பதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபார்ம் கட்டணத்தின் மூலம், இழந்த வருவாயை அதிகளவில் மீட்டக்கூடிய வழியை ஏற்படுத்தியுள்ளது ஸ்விக்கி.

தினசரி 1.5 மில்லியனுக்கும் மேலான ஆர்டர்கள்!

இந்த பிளாட்ஃபார்ம் கட்டணம் என்பது, வெறும் 2ரூபாய் தானே என சிறியதாக தோன்றினாலும், இந்நிறுவனம் தினசரி 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Swiggy

மேலும் இக்கட்டணம் தற்போது பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய வருமானத்தை பொறுத்தவரையில், Zomato வருவாயான ரூ. 4,100 கோடியுடன் ஒப்பிடும்போது, ஸ்விக்கி சுமார் ரூ. 5,700 கோடி வரையிலான வருமானத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.