வணிகம்

ஒரு லட்சம் பணியாளர்களை வேலைக்கு எடுக்க காக்னிசன்ட் திட்டம்

EllusamyKarthik

இந்த ஆண்டில் ஒரு லட்சம் பேரை வேலைக்கு எடுக்க காக்னிசன்ட் திட்டமிட்டிருக்கிறது. ஐடி நிறுவனங்களில் வெளியேறுவோர் விகிதம் காக்னிசன்ட்டில் அதிகமாக இருக்கிறது. அதனால், கூடுதல் பணியாளர்களை எடுக்க திட்டமிட்டிருக்கிறது. இதில் 30,000 பேர் படித்து முடித்து புதிதாக வேலை தேடுபவர்கள். மீதமுள்ளவை அனுபவம் வாய்ந்தவர்களை எடுக்க காக்னிசன்ட் திட்டமிட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு 45,000 புதியவர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறது காக்னிசன்ட் நிறுவனம்.

கடந்த இரு ஆண்டுகளில் நிறுவனத்தில் புதிய பணியாளர்களை நியமனம் செய்துவந்தாலும் 1.2 லட்சத்துக்கும் மேலான நபர்கள் வெளியேறி இருக்கிறார். கடந்த மார்ச் காலாண்டில் வெளியேறுவோர் விகிதம் 21 சதவீதமாக இருக்கிறது.

ஜூன் காலாண்டில் 31 சதவீதம் அளவுக்கு வெளியேறுவோர் விகிதம் இருந்தது. இந்த காலாண்டில் 23,300 நபர்கள் வெளியேறி இருக்கிறார்கள். கடந்த மூன்று மாதத்தில் தினமும் 350 - 380 பணியாளர்கள் வரை வெளியேறி இருக்கிறார்கள். கடந்த காலாண்டு முடிவில் 3,01,200 பணியாளர்கள் உள்ளனர்.

ஆனால், இதே காலத்தில் டிசிஎஸ் (8.6%) விப்ரோ (15.5%), இன்ஃபோசிஸ் (13.9%) மற்றும் ஹெச்.சி.எல். டெக் (11.8%) ஆகிய நிறுவனங்களில் மிகவும் குறைவாகவே பணியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.

வெளியேறும் பணியாளர்களில் பெரும்பாலானோர் நடுத்தர மற்றும் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரைன் ஹம்ரிஸ் தெரிவித்திருக்கிறார்.

காக்னிசன்ட் நிறுவனத்தில் பணியாற்றிய உயர் அதிகாரிகள் பலர் நடுத்தர ஐடி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளாக இருக்கிறார்கள். கடந்த இரு ஆண்டுகளில் எட்டுக்கும் மேற்பட்ட காக்னிசன்ட் அதிகாரிகள் தலைமைச் செயல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.