தீபாவளிக்கு இந்த வருடம் புது வரவாக பட்டுப் புழுக்களை கொல்லாமல் தயாரிக்கப்படும் அகிம்சா பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோ ஆப்டெக்சின் இந்த அறிமுகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
வருடந்தோறும் அரசு நிறுவனமான கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் விற்பனையை அதிகரிக்கும் வகையில் புதிய புதிய வடிவங்களில் ஆடைகளை அறிமுகபப்டுத்தி வருகின்றனர். சில ஆண்டுக்களுக்கு முன் இயற்கை முறையில் தயாரித்த ஆர்கானிக் புடவைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் பழையபாணி பட்டில் நவீனங்களை புகுத்தி புதிய ரக பட்டுப்புடவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு பட்டுப் புழுக்களை கொல்லாமலேயே பட்டு சேலையை தயாரித்து அகிம்சை பட்டு என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அகிம்சை பட்டு குறித்து கோ ஆப்டெக்ஸ் கோவை மண்டல மேலாளர் நடராசன், "ஒரு பட்டு சேலை தயாரிக்க 10 ஆயிரம் பட்டுப் புழுக்கள் வரை கொல்லப்படுகின்றன. இதனால் சிலர் வாங்குவதில் தயக்கம் காட்டி வந்தனர். அதனை தவிர்க்கும் வகையில் பட்டுப்புழுக்கள் வளர்ந்து வண்ணத்து பூச்சிகளாக பறக்கும் வரை காத்திருந்து, பின்னர் வண்ணத்து பூச்சி விட்டுச்சென்ற கூட்டிலிருந்து பட்டு நூல் தயாரித்து அதன் மூலம் அகிம்சை பட்டு சேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.
தீபாவளி சிறப்பு விற்பனையாக கோ ஆப்டெக்சில் 3௦% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் தவணை முறையிலும் பட்டுப் புடவைகளை வாங்குவதற்காகவும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.