பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரூ.3 லட்சம் கோடி தேவை என இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவர் (சிஐஐ) டிவி நரேந்திரன் தெரிவித்திருக்கிறார். டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் இவர், சிஐஐ புதிய தலைவராக சில வாரங்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார்.
"கொரோனாவின் இரு அலைகள் பெருமளவுக்கு பாதித்திருப்பதால் மக்களின் நுகர்வுத் தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பொருளாதாரதை ஊக்குவிக்க அரசின் உதவி தேவைப்படுகிறது.
பொருளாதாரத்தை ஊக்குவிக்க, ஜன்தன் பரிவர்த்தனையை உள்ளடக்கி ரூ.3 லட்சம் கோடி தேவை. இந்தத் தொகை ஜன்தன் கணக்குகள் மூலமாக நேரடியாக பயனாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். அப்போதுதான் தேவையை உயர்த்த முடியும். இந்தியப் பொருளாதாரம் என்பது நுகர்வு சார்ந்தது. ஜிடிபியில் நுகர்வு பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் கொரோனா காரணாமாக இவை பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனை மீட்ட பொருளாதார உதவி தேவை" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
"தவிர, பெட்ரோல் டீசல் மீதான் எக்ஸைஸ் வரி குறைப்பது, குறிப்பிட்ட காலத்துக்கு வரி சலுகைகள் வழங்குவது, வீடு வாங்குபவர்களுக்கு கூடுதல் சலுகை கொடுப்பது, ஜிஎஸ்டி வரியை குறைப்பது, விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது உள்ளிட்டவற்றை அரசு செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இதுவே சரியான தருணம்" என டிவி நரேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
"அதேபோல சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு அவசரகால கடன் உத்தரவாதத் திட்டமான Emergency credit line guarantee scheme-ன் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது. இதனை தற்போது ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும். அடுத்த மார்ச் வரையில் இந்த கடன் கொடுக்கப்பட வேண்டும்.
நடப்பு நிதி ஆண்டில் 9.5 சதவீத அளவுக்கு இந்திய பொருளாதாரம் வளரும். ஆனால், 2024-25-ம் நிதி ஆண்டில் 9 சதவீத வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அரசாங்கத்தின் செலவு, தடுப்பூசி மற்றும் சீர்த்திருத்தங்கள் தேவை.
தற்போது முதல் ஜூன் வரை தினமும் 71 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். அப்போதுதான் பெரும்பாலானவர்களுக்கு நாம் தடுப்பூசி போட்டிருப்போம். நகரங்கள் மட்டுமல்லாமல் அனைத்து கிராமம், சிறு நகரங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் சென்றடவதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.