வணிகம்

சீன அரசின் நடைமுறைக்கு எதிராக ஊழியர்களுக்கான நேரத்தை குறைத்த பைட் டான்ஸ் நிறுவனம்

EllusamyKarthik

சீனாவின் பன்னாட்டு இன்டர்நெட் டெக்னாலஜி நிறுவமான ‘பைட் டான்ஸ்’, தனது நிறுவனத்தின் பணியாற்றும் ஊழியர்களின் வேலை நேரத்தை குறைத்துள்ளது. அதன்படி ஊழியர்கள் திங்கள் முதல் வெள்ளி வரையில், காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரையில் வேலை செய்தால் போதும் என தெரிவித்துள்ளது பைட் டான்ஸ். இதனை கட்டாயமாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. டிக்டாக் செயலியை வடிவமைத்ததும் இந்த நிறுவனம் தான். 

இதன் மூலம் சீன நாட்டில் இயங்கிவரும் டெக் நிறுவனங்களில் முதல் நிறுவனமாக இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது பைட் டான்ஸ். அதோடு ஊழியர்கள் யாரேனும் இந்த நேரத்தை கடந்து கூடுதலாக பணியிடத்தில் இருக்க வேண்டுமென்றால் அதற்கு குறைந்தது ஒருநாள் முன்னதாக நிறுவனத்தின் அனுமதியை பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் ‘996’ என்ற நடைமுறையின் கீழ் பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் வேலை செய்வது வழக்கம். அதாவது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்பதை இது குறிக்கிறது. இந்நிலையில் பைட் டான்ஸ் அதனை மாற்றி அமைத்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ‘நம்ம முதலாளி; நல்ல முதலாளி; வெள்ளை மனம்; பிள்ளை குணம்; உள்ள முதலாளி!’ என்ற பீட்டுக்கு ஏற்றபடி டான்ஸ் ஆடி வருகின்றனர் பைட் டான்ஸ் ஊழியர்கள்.