இந்தியாவில் சில புத்தாக்க தொழில் நிறுவனங்களில் சீனா செய்துள்ள முதலீடுகள் சந்தேகம் எழுப்பும் வகையில் இருப்பதாகவும் இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், உணவு வினியோகம், போக்குவரத்து, மருந்து, மருத்துவம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த புத்தாக்க நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் செய்துள்ள முதலீடு இந்திய மக்களின் சில முக்கியமான தகவல்களை சேகரிப்பதற்குத்தான் என தோன்றுகிறது.
எனவே இது குறித்து விரிவான விசாரணை தேவை என்றும் மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வர்த்தகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் சீன முதலீடுகள் எதையும் நேரடியாக இந்தியாவுக்குள் அனுமதிக்க கூடாது என்றும் ஒவ்வொரு முதலீட்டையும் அரசின் பரிசீலனைக்கு பின்பே அனுமதிக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.