வணிகம்

இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 5 ஆயிரத்தை தொட்டது ஏலக்காய் விலை!

webteam

இதுவரை இல்லாத அளவுக்கு ஏலக்காய் விலை கிலோ ரூ 5 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. 

இந்திய ஏலக்காய் உற்பத்தியில் கேரளா முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின்போது, இடுக்கி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 340 ஹெக்டேர் பரப்பிலான‌ ஏலக்காய் தோட்டங்களில் 70 சதவிகிதம் அழிந்துவிட்டது. இதையடுத்து புதிதாக நடப்பட்ட ஏலக்காய் செடிகள் காய்ப்பிற்கு வர 3 ஆண்டுகளாவது ஆகும் என்ற நிலையில், வெள்ளத்துக்கு தப்பிய ஏலக்காய் செடிகளில் இருந்து மட்டுமே ஏலக்காய் கிடைத்து வருகிறது.

இதனால் சந்தைக்கு ஏலக்காய் வரத்து குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ.3 ஆயிரத்தை தொட்ட ஏலக்காய் விலை, மே மாதம், முதல் வாரத்தில் ரூ. 4 ஆயிரத்தை எட்டியது. தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த ஏலக்காய், புற்றடியில் நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. சராசரியாக கிலோ மூவாயிரத்து 245 ரூபாய்க்கு ஏலம் போனது. ஏலக்காய் விலை இவ்வளவு ரூபாயை தொட்டது, இதுவே முதன் முறை என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.