வணிகம்

முடிவுக்கு வரும் உலகின் காஸ்ட்லியான லஞ்ச்

webteam

சர்வதேச அளவில் முக்கிய பணக்காரர் வாரன் பபெட். க்ளைட் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் இவர் நேரத்தை செலவிடுவார். வாரன் பபெட் உடன் லஞ்ச் சாப்பிடுவதற்கான நேரம் ஏலம் விடப்படும். அந்தத் தொகை க்ளைட் அறக்கட்டளைக்கு வழங்கப்படும். கோவிட் காரனமாக கடந்த இரு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை.

கடந்த 2000-ம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகளாக க்ளைட் அறக்கட்டளைக்கு நிதி திரட்டி இருக்கிறார். 2000ம் ஆண்டு 25000 டாலர் வரை ஏலம் சென்றது. 2008-ம் ஆண்டு முதல் மில்லியன் டாலருக்கு மேல் இந்த ஏலம் செல்கிறது. கடைசியாக 2019-ம் ஆண்டு கிரிப்டோகரன்ஸி துறையில் உள்ள தொழில்முனைவோர் ஜஸ்டின் சன் 4.57 மில்லியன் டாலருக்கு ஏலம் கேட்டிருந்தார். க்ளைட் அறக்கட்டளைக்கு இதுவரை 34 மில்லியன் டாலருக்கு மேல் நிதி திரட்டி கொடுத்திருக்கிறார் வாரன் பபெட். ஆனால் தற்போது (2022ம் ஆண்டு) நடக்க இருப்பதுதான் கடைசியான பிரைவேட் லஞ்ச். இனிமேலும் இதை செய்யப்போவதிலை என தெரியவந்திருக்கிறது.

என்ன காரணத்தால் இந்த ஏலம் முடிவுக்கு வருகிறது என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. ஆனால் வாரன் பபெட் மற்றும் க்ளைடுக்கு இடையே உள்ள நட்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை வாரன் பபெட்டின் முதல் மனைவி சுசி திட்டமிட்டார். ஆனால் 2004-ம் ஆண்டு மறைந்துவிட்டார். அவர் இல்லாவிட்டாலும் இத்தனை ஆண்டுகாலம் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஏலத்தில் வெற்றி பெறுபவர் தன்னுடன் ஏழு விருந்தினர்களை அழைத்து செல்ல முடியும். 2019-ம் ஆண்டு ஏலத்தில் வெற்றிபெற்ற ஜஸ்டின் சன், கிரிப்டோகரன்ஸி குறித்து வாரன்பபெட்டில் பேசி இருக்கிறார். வாரன் பபெட் மூலமாக கிரிப்டோகரன்ஸி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என திட்டமிட்டார். ஆனாலும் அந்த சந்திப்புக்கு பிறகு வாரன் பபெட் எந்த விதமான கிரிப்டோகரன்ஸியிலும் முதலீடு செய்யவில்லை.

வரும் ஜூன் 12-ம் தேதி இபே நிறுவனத்தில் தொடங்கும் ஏலம் ஜூன் 17-ம் தேதி முடிவுக்கு வருகிறது. ஆரம்பவில்லை 25,000 டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. க்ளைட் அறக்கட்டளை வீடில்லாதவர்களுக்கு உதவி செய்கிறது.