2025- 26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
முன்னதாக நேற்றைய தினம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் முன் நாடாளுமன்ற வளாகத்தில் உரையாற்றிய பிரதமர், 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அனைவருக்குமானதாக இருக்கும் என்றார். மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், இந்த கூட்டத்தொடரில் ஏராளமான மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
பெண்கள் முன்னேற்றத்துக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் பட்ஜெட் இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8 ஆவது பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி உச்சவரம்பில் மாற்றங்கள் வருமா? புதிய வருமானவரி நடைமுறையில் என்னவிதமான மாற்றங்கள் வரும் என்பது நடுத்தர, உயர் நடுத்தர பிரிவினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.