எதிர்வரும் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க வேண்டும் என வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் சங்கமான அசோச்செம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தனிநபர் வருமானவரி ஹாங்காங்கில் 15 சதவிகிதமாகவும், இலங்கையில் 18 சதவிகிதமாகவும், வங்கதேசத்தில் 25 சதவிகிதமாகவும், சிங்கப்பூரில் 22 சதவிகிதமாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இந்தியாவில் உச்சபட்ச வரி அடுக்கு பிரிவில் 42 சதவிகிதமாக உள்ளதை அசோச்செம் சுட்டிக்காட்டியுள்ளது. புதிய வரி விகித முறையில் இது 39 சதவிகிதமாக உள்ளது. அதேநேரம், கார்ப்பரேட் வரி விகிதம் 25 சதவிகிதமாக மட்டுமே உள்ளது என அசோச்செம் தெரிவித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியுடன் ஒப்பிடும்போது தனிநபர் வரி அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ள அசோச்செம், இதனை எதிர்வரும் பட்ஜெட்டில் குறைக்க வலியுறுத்தியுள்ளது.
இதேபோல எதிர்வரும் பட்ஜெட்டில் ஹைபிரிட் வாகனங்களுக்கு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என துறை சார்ந்தவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலால் ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரே வரி குறைப்பது குறித்து அறிவிக்கப்படும்.
இருப்பினும், துறை சார்ந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஹைபிரிட் வாகனங்களுக்கு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஹைபிரிட் வாகனங்களுக்கு தற்போது 28 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இது மின்சார வாகனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை விட அதிகம். எனவே, இதனை மாற்றி அமைப்பது தொடர்பான அறிவிப்புகள் எதிர்வரும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.