செய்தியாளர்: பால வெற்றிவேல்
அதிக மனித வளம், புவிசார் அரசியல் முக்கியத்துவம், நாளைய சூப்பர் பவர் போன்ற எதிர்பார்ப்புகள் காரணமாக இந்தியாவின் பாதுகாப்புத்துறை பட்ஜெட்டை, உலக நாடுகளும் கவனிக்கின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகான ஆண்டுகளில், குறிப்பாக, 1950ஆம் ஆண்டு மொத்த பட்ஜெட் தொகையில் பாதுகாப்புத் துறைக்கு 38.9 சதவீதம் தொகை ஒதுகப்பட்டிருந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
1962ஆம் ஆண்டு சீனாவுடனான யுத்தத்தின் போது பாதுகாப்புத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போர் காரணமாக மொத்த பட்ஜெட்டில் 24 சதவிகிதம் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 1999ஆம் ஆண்டில் கார்கில் போரின்போது பாதுகாப்புத் துறை செலவினங்கள் 18 சதவிகிதமாக இருந்த நிலையில், 2010ஆம் ஆண்டில் 15 சதவிகிதமாக குறைந்தது. 2016-17ஆம் ஆண்டில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் காரணமாக நிதி ஒதுக்கீடு மீண்டும் 18 சதவிகிதமாக உயர்ந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 13 சதவிகிதமானது. அதாவது 6 லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் பட்ஜெட் குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில், ராணுவ தளவாட ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கினால், பாதுகாப்புத் துறைக்கான ஆயுதங்கள் இறக்குமதி செலவினம் குறையும் எனக் கூறுகிறார் முன்னாள் ராணுவ அதிகாரி முருகானந்தம். ராணுவ வீரர்களுக்கான நலவாழ்வு திட்டங்கள், சம்பள உயர்வு, உள்ளிட்ட கோரிக்கைகளும் எழுப்பப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு, விண்வெளி பாதுகாப்பு, சுயமாக செயல்படும் ராணுவ அமைப்புகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும் எனவும், உள்நாட்டு MSME துறையை ஆதரித்து, உலகளவில் பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியாவை முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் தேவை எனவும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.