வணிகம்

கட்டண உயர்வு அறிவிப்பு எதிரொலி : உயர்ந்தது ஏர்டெல், வோடஃபோன் பங்குகள்

webteam

கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், பங்குசந்தையில் வோடஃபோன், ஏர்டெல் நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

இன்றைய தினத்தில் செல்போன் இல்லாத நபர்களே இல்லையென்றே சொல்லலாம். நாட்டில் சுமார் 100 கோடி பேருக்கு மேல் தொலைபேசி மற்றும் கைப்பேசி பயன்படுத்தும் நிலையில், ஜியோ நிறுவனம் மட்டுமே தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தச் சூழலில் தொழில்போட்டி மற்றும் நஷ்டங்களை சமாளிக்கும் வகையில், வரும் டிசம்பர் மாதம் செல்போன் சேவை கட்டணங்களை உயர்த்த போவதாக வோடாஃபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிவித்தன. 

இந்நிலையில், வோடஃபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் பங்குகளின் விலை இன்று பங்குச் சந்தையில் சற்று அதிகரித்து காணப்படுகின்றன. அதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகளின் விலை 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் தற்போது 432 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகின்றன. அதேபோல வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் 28.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

இந்தப் பங்குகளின் விலை அதிகரிப்பு இந்த நிறுவனங்கள் அறிவித்த கட்டண அறிவிப்பிற்கு பின் வந்துள்ளது. எனினும் இந்த நிறுவனங்கள் தங்களின் கட்டண உயர்வு தொகையை இதுவரை அதிகரிக்கவில்லை. வரும் டிசம்பர் மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட புதிய கட்டணங்களை இந்நிறுவனங்கள் அறிவித்தால் அது இந்த நிறுவனங்களின் பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதேசமயம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வோடஃபோன் பங்குகளின் விலை நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.