இந்த வருடம் ஜூன் முதல் ஆகஸ்ட வரை, ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையை வங்கிகள் குறைத்துள்ளன.
மத்திய அரசு டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. அதற்கு ஏற்றாற் போல வங்கிகள், தற்போது ஏடிஎம் மையங்களை குறைத்துவருகிறது. இந்தியா முழுவதும் அதிகமான ஏடிஎம் மையங்களை வைத்துள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனது 91 ஏடிஎம் மையங்களை மூடியுள்ளது. அதாவது, 59,291 ஏடிஎம் மையங்களில் இருந்து 59,200 ஏடிஎம் மையங்களாக குறைத்துள்ளது. பஞ்சாப் நேஷனல் பேங்க் 10,502 மையங்களில் இருந்து 10,083 ஆக குறைத்துள்ளது. ஹெச்.டி.எப்.சி, 12,230-ல் இருந்து 12,225 ஆக குறைத்துள்ளது.
மும்பை போன்ற நகரங்களில் ஏடிஎம் மையத்துக்கான வாடகை, மாதம் ரூ.40 ஆயிரம் என்றும் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் 8 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை இருப்பதாகவும் வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதோடு, ஏடிஎம் செக்யூரிட்டி, பராமரிப்பு செலவு, மின் கட்டணம் ஆகியவற்றையும் சேர்த்தால், ஒரு மாதத்துக்கு ஒரு ஏடிஎம் மையத்துக்கு ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை ஆவதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. அதனால் ஏடிஎம் மையங்களை குறைத்துள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.